வடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு: மக்கள் அச்சம்

சென்னை: தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 14 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 500க்கும் மேல் அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி சென்னையில் 13,980 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, அரசு பன்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் ஒரேநாளில் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர்.  திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 47 வயது பெண்க்கு சளி, இருமல், காய்ச்சல் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு, கடந்த 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

* கே.கே நகர் ராணி அண்ணா தெருவை சேர்ந்த 47 வயது பெண், கடந்த வாரம் கொரோனா தொற்றால் கே.கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

* ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டேரி கொசப்பேட்டை சின்னத்தம்பி தெருவை சேர்ந்த 78 வயது மூதாட்டி, தண்டையார்பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்த 50 வயது பெண் மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த 37 வயது ஆண் ஆகிய 3 பேரும் நேற்று இறந்தனர்.

* பெரம்பூரை சேர்ந்த 84 வயது  முதியவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, அவருக்கு கடந்த 26ம் தேதி கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று  முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் திருவிக நகர்  மயானத்தில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

* திருவிக நகர்  டிடி தோட்டம் முதல் தெருவை சேர்ந்த 50 வயது பெண் உடல்நிலை  பாதிக்கப்பட்டதால் கடந்த 26ம் தேதி தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.  தொடர் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது உடல்  மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிவாசல் சுடுகாட்டில் நேற்று மாலை அடக்கம்  செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் அதிகம். நீரிழிவு, ரத்த கொதிப்பு, கேன்சர் போன்ற நோய்களே அவர்களின் இறப்புக்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 25 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தான் அதிகம் பேர் இறக்கின்றனர். அதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: