கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு 3 சிறப்பு மருத்துவமனை: மாநகராட்சி தகவல்

சென்னை:  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு அரசு வழிகாட்டுதல்படி பிரசவ தேதி குறிக்கப்படும்.  அதற்கு 5 நாட்களுக்கு முன்பாக  கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் முடிவில் பல கர்ப்பிணிகளுக்கு நோய் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 33ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

தற்போது, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை,   கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளிட்ட நான்கு அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க 3 சிறப்பு மருத்துவமனைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி திருவொற்றியூரில் 50 படுக்கை வசதியுடனும், ராயபுரம் பெருமாள்பேட்டையில் 30 படுக்கை வசதியுடனும், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 30 படுக்கை வசதியுடனும் என மொத்தம் 110 படுக்கைகளுடன் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகளுக்கு இங்கு தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படும், என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: