கள்ளத்தனமாக நுழைபவர்களால் குமரியில் கொரோனா அதிகரிக்கும் அபாயம்: உதவி செய்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமா?

நாகர்கோவில்: குமரி மாவட்டத்துக்குள் கள்ளத்தனமாக நுழைபவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வருபவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை வரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குமரி மாவட்டத்துக்கு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  இ பாஸ் பெற்று முறைப்படி தனியார் வாகனங்களில் வருபவர்கள் உரிய பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்துதலில் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள். பின்னர் பரிசோதனை முடிவுகளை பொறுத்து இவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனால் ஆரல்வாய்மொழி, களியக்காவிளை சோதனை சாவடிகளில் சுகாதார துறை அதிகாரிகள், காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள். இ பாஸ் இல்லாதவர்களை மாவட்டத்துக்குள் அனுமதிப்பது இல்லை. இந்த நிலையில் பரிசோதனையில் இருந்து தப்புவதற்காக திருட்டுத்தனமாக மாவட்டத்துக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவ்வாறு நுழைபவர்களுக்கு உள்ளூரில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்கிறார்கள். மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் திருட்டுத்தனமாக ஊருக்குள் வந்தவர்கள் தற்போது கொரோனா உறுதியாகி, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

இது போன்ற நபர்களால் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, அந்த தெரு முழுவதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. உரிய பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என  மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்தும் கூட அதை உதாசீனப்படுத்தி சுற்றி திரிந்ததன் விளைவாக குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.  சமீபத்தில் குமரி மாவட்டம் இடைக்கோடு குடுக்கச்சிவிளை பகுதியை சேர்ந்த 3 பேர் சென்னையில் இருந்து ரகசியமாக குறுக்கு வழியாக குமரி மாவட்டத்துக்குள் நுழைந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் வந்த தகவல் ஊர் மக்கள் மூலம் சுகாதாரத்துறைக்கு தெரிந்து இவர்களிடம் இருந்து களியக்காவிளை சோதனைசாவடியில் சளி மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தங்கியிருந்த பகுதியை தனிமைப்படுத்தி அந்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து அவர்கள் எந்த பகுதிகளுக்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. புதுமனை புகுவிழாவிலும் இவர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் இருந்து வாடகை காரில் முப்பந்தல் வரை வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சாதாரண தொழிலாளிகள் போல் நடந்து வந்து ஆரல்வாய்மொழி சோதனையை சாவடியை கடந்துள்ளனர். தோவாளை வரை நடந்து வந்தவர்கள் பின்னர் ஒரு வாடகை காரில்,  ஊருக்கு சென்றுள்ளனர். இப்போது இவர்களுக்கு உதவிய அந்த வாடகை கார் டிரைவரையும் தேடி வருகிறார்கள். ஊருக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஜாலியாக சுற்றி திரிந்துள்ளனர்.

எந்த அறிகுறியும் இல்லாததால், தனிமைப்படுத்தி கொள்ள வில்லை என கூறி உள்ளனர். அறிகுறி இல்லாமல் பரவி வருவது தான், ஆபத்தாகி இருப்பதாக அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் இதே போல் மும்பையில் இருந்து சென்னை வந்த வாலிபர், அங்கிருந்து லாரி கிளீனர் போல் மாவட்டத்துக்குள் நுழைந்தார். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தாக்கி இருப்பது தெரிய வந்தது. இவ்வாறு கள்ளத்தனமாக நுழைபவர்களால் ஆபத்து அதிகரித்து வருகிறது.  இவ்வாறு சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யாமல் கள்ளத்தனமாக மாவட்டத்துக்குள் நுழைபவர்களுக்கு உதவி செய்கிறவர்கள் மீதும், தொற்று பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்ைக எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி மாவட்டத்தில் நேற்று மாலை 14,197 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வீட்டு தனிமைப்படுத்துதலில் 377 நபர்கள் உள்ளன. விதிமுறைகள் மீறியதாக 8068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5988 வாகனங்கள் பறிமுதலாகி உள்ளன. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் படி, பல்வேறு துறை மூலம் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஒலி பெருக்கி மூலமாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியே சென்று பொருட்களை வாங்கும் போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

வீட்டுக்குள் செல்லும் போது கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இருமல், தொண்டை வலி, காயச்சல் இருந்தால் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். இ பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு , மாவட்டத்துக்குள் வர யாரும் உதவி செய்ய வேண்டாம். அவ்வாறு வருபவர்கள் பற்றி தகவல் தெரிந்தால், 1077, 04652 231077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: