ஆபத்தான நிலையில் ஆற்றை கடந்து புதுச்சேரி சாராயக்கடைக்கு படையெடுக்கும் குடிமகன்கள்

பாகூர்: புதுச்சேரி பாகூர் எல்லைப்பகுதி சாராயக்கடைக்கு கழுத்தளவு ஆற்றை கடந்து ஆபத்தான நிலையில் தமிழக குடிமகன்கள் படையெடுத்து வருகின்றனர். கொரோனோ வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது 4வது கட்டமாக நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் திறக்கப்பட்டன. மேலும் மதுபான விலையை அரசு இரு மடங்காக உயர்த்தியதால் குடிமகன்கள் சாராயக்கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தமிழகப் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் அங்கும் அனைத்து வகையான மதுபானங்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த குடிமகன்கள் புதுச்சேரி சாராயக்கடைக்கு படையெடுத்து வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கடலூர் மாவட்ட எல்லையை கடந்து புதுச்சேரிக்குள் நுழையும் அனைத்து சாலைகளையும் அடைத்தனர். இருப்பினும் போலீசாருக்கு தெரியாமல் வயல்வெளி வழியாக நுழைந்து சாராயம் வாங்கி சென்றனர்.

அதையும் போலீசார் பள்ளம் தோண்டி முட்புதர்கள் அடைத்து பாதையை துண்டித்தனர். இதற்கிடையே சிலர், புதுச்சேரி மற்றும் கடலூர் இடையே உள்ள தென்பெண்ணை ஆற்றில் இறங்கி நீந்தி வந்து புதுச்சேரி மாநில எல்லையிலுள்ள ஆராய்ச்சிகுப்பம் சாராயக் கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். போதை தலைக்கு ஏறியதும் நடக்க முடியாமல் தள்ளாடியபடி மீண்டும் அவர்கள் ஆற்றில் இறங்கி நீந்த தொடங்கினர். அதில் ஒரு சிலர் நீந்த முடியாமல் தத்தளித்தனர். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் ஆற்றின் வழியாக யாரும் கடந்து வரக்கூடாது, மது குடிக்கவும் கட்டாயம் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்தபடி போலீசார் அங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: