×

தண்ணீர், சாப்பாடு கூட கிடைக்காத அவலம்; டெல்லியில் இருந்து வந்த 50 பேரை குமரிக்குள் அனுமதிக்க மறுப்பு: சோதனை சாவடி அருகே விடிய, விடிய தவிப்பு

களியக்காவிளை: டெல்லியில் இருந்து வந்த 50 பேரை, களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தியதால், விடிய விடிய தவிப்புக்கு உள்ளானார்கள். அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், மக்கள் நிலைமை படுமோசமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லி, மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வரும் ரயில்களில், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருகிறார்கள். இவ்வாறு வரும் பயணிகளை, திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கேரள அரசு பஸ்களில் ஏற்றி, குமரி - கேரள எல்லையில் உள்ள கேரள சோதனை சாவடியான இஞ்சிவிளையில் இறக்கி விடுகிறார்கள்.

அங்கிருந்து பயணிகள் நடந்து, குமரி சோதனை சாவடியான களியக்காவிளை வருகிறார்கள். ஆனால் இ பாஸ் இல்லாததால் களியக்காவிளை சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகள், போலீசார் இவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. மத்திய அரசு இயக்கிய ரயிலில் வந்த எங்களிடம் இ பாஸ் எப்படி இருக்கும் என பயணிகள், தமிழக அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார்கள். இந்த பிரச்சினை காரணமாக சோதனை சாவடி அருகே குழந்தைகள், பெண்கள், ஆண்கள் மூட்டை, மூடிச்சுகளுடன் விடிய, விடிய தவிக்கும் நிலை உள்ளது. சாப்பாடு கூட இல்லாமல் சாலையில் படுத்து உறங்கும் பரிதாபமும் உள்ளது.

நேற்று முன் தினம் இவ்வாறு வந்த 59 பயணிகளில் 48 பயணிகளை மட்டும் தமிழக அரசு பஸ்களில் கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். 11 பயணிகள் 2 நாட்கள் தவிப்புக்கு பின் நேற்று மாலை தான் கன்னியாகுமரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவும் 50க்கும் மேற்பட்ட பயணிகளை, இஞ்சிவிளை சோதனை சாவடியில் விட்டு விட்டு கேரள அதிகாரிகள் சென்று விட்டனர். இவர்கள் 50 பேரும் டெல்லியில் இருந்து வந்தவர்கள் ஆவர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இஞ்சிவிளையில் இருந்து நடந்து களியக்காவிளைக்கு வந்தனர். களியக்காவிளை சோதனை சாவடியில் இவர்களை அனுமதிக்க வில்லை.

இதனால் விடிய, விடிய குழந்தைகளுடன் சோதனை சாவடி அருகே ரோட்டில் அமர்ந்து இருந்தனர். மழையும் லேசாக தூறியதால் பதற்றம் அடைந்தனர். இது பற்றி அங்கிருந்த போலீசார், அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பெரும்பாலான உயர் அதிகாரிகள் போனை எடுக்க வில்லை. தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மட்டும் போனை எடுத்துள்ளார். அவர் பயணிகளுடன் பேசி, மாவட்டத்தில் உள்ள நிலையை விளக்கினார். இன்று காலை வரை இந்த பயணிகளை அழைத்து செல்ல  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. காவல்துறையினர் அவ்வப்போது பயணிகளுடன் பேசி, நிைலமையை புரிந்து கொள்ளுங்கள் என சமாதானம் செய்தனர்.

ஒரு சிலருக்கு சாப்பாடும் வாங்கி கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் கொேரானா தகவலுக்காக கட்டுப்பாட்டு அறை வைத்துள்ளது. அந்த கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டாலும் பலன் இல்லை என்று பயணிகள் கூறினர்.
இந்த பிரச்சினை குறித்து குமரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், கேரள அதிகாரிகள் இது பற்றி முறையான தகவலை தெரிவிப்பது இல்லை. அவர்களாக எல்லையில் கொண்டு வந்து விட்டு விட்டு செல்கிறார்கள். யார், யார் வருகிறார்கள் என்ற பெயர் விபரத்தை கூட தருவதில்லை.  எப்படி இவர்களை கண்டறிந்து சோதனை செய்வது மற்றும் தங்க ஏற்பாடு செய்வது என்பது தெரிய வில்லை.

இதனால் குழப்பம் ஏற்படுகிறது. கேரள மற்றும் தமிழக அரசு பேசி, ஒருமுறையான ஏற்பாடுகளை செய்யா விட்டால், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இன்னும் பரிதவிப்புக்கு உள்ளாவார்கள் என்றனர்.


Tags : Delhi ,Kumari ,checkpoint Water , Water, meals, misery, Delhi, Kumari, refusal to allow
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...