×

தனியார் முதலாளிகள் இனி மின் விநியோகத்திலும் ஈடுபடுவார்கள்; மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிடுக : திருமாவளவன் கருத்து

சென்னை : மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (மே 30) வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசு தற்போது கொண்டு வர முயலும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாகத் தமிழகத்தின் ஒருங்கிணைந்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் பொருட்டு காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இது மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகவும் விவசாயிகளையும் ஏழை மக்களையும் பாதிக்கும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

கொரோனா நோய்த்தொற்று பேரிடர் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்குவது என முடிவெடுத்திருக்கிறது. இப்போது மின்சார விநியோகத்தையும் தனியாரிடம் கொடுப்பது என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான சட்டத் திருத்த மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதுவரை மின் உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டு இருந்த தனியார் முதலாளிகள் இனி மின் விநியோகத்தில் ஈடுபடுவதற்கு இந்த சட்டத் திருத்த மசோதா வழிவகுக்கிறது. அதன் மூலம் அவர்கள் விரும்பும் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள இது அனுமதியளிக்கிறது. தற்போது அரசே மின் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதால் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது. அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்து வருகிறது.

தனியாரிடம் மின்விநியோகம் தாரை வார்க்கப்பட்டால் அவர்கள் நிர்ணயிப்பதே மின் கட்டணமாக இருக்கும், இலவச மின்சாரம் என்பது முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

விவசாயிகள் மட்டுமல்ல ஒரு விளக்கு மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் பயன் பெற்றுக் கொண்டிருக்கின்ற லட்சக்கணக்கான ஏழை மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் இந்தத் திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழக முதல்வர் இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதுமட்டுமே போதாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரது ஒருங்கிணைந்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக காணொலிக் காட்சி மூலமாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கு முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags : employers ,Thirumavalavan , Private, employers, no longer, power distribution, electricity, law amendment
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு