ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்; முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை நங்கநல்லூரில் சேர்ந்த 58 வயது பெண் தலைமை செவிலியர் மேரி பிரிசில்லா. இவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மற்ற செவிலியர்களுக்கு பணி நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார். இவர் கடந்த ஏப்ரல் மாதமே ஓய்வு பெற இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு அரசு பணியை நீட்டித்து உத்தரவிட்டதால் பணியை மேற்கொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 26-ஆம் தேதி பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. இது சம்மந்தமாக மருத்துவமனை டீன் வசந்தி ‘பிரிசில்லாவின் மருத்துவ அறிக்கையில் கொரோனா என்று குறிப்பிடப்பட்டிருப்பது குறித்தும், யார் அவ்வாறு குறிப்பிட்டார் என்பது குறித்தும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரக பாதிப்புடன் சர்க்கரை நோய் இருந்ததாகவும், அதனால் அவரை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சென்னை ரஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பணியின்போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியர் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவருடைய குடும்பத்திற்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுளேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: