×

பரிசோதனை முதல் சமூக பொறுப்பு வரை!! : தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர உதவும் 5 வழிகள்!!!

சென்னை : தமிழகத்தின் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநிலத்திற்கு உதவும் ஐந்து நடவடிக்கைகளை பார்க்கலாம்.

பரிசோதனை, தனிமைப்படுத்துதல், பாதுகாப்பு

கொரோனாவுக்கான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்காத நிலையில், பரிசோதனைகள் எண்ணிக்கைகளை  அதிகரித்தல் மற்றும் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக தேசிய தொற்றுநோயியல் நிறுவன துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர் கூறுகையில், தினமும் சென்னையில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படும் எண்ணிக்கையை விட கூடுதலாக 8000 பேருக்கு சோதனை செய்ய வேண்டும், என்றார்.

தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் பொது சுகாதார நிபுணருமான  சுந்தரராமன் டி. கூறுகையில , 60 வயதுக்கு மேற்பட்டோர் அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதுவே இளம் வயதினருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தலாம். அதே சமயம், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களை சுகாதார பணியாளர்கள் நாள்தோறும் 2 முறையாவது கவனித்துக் கொள்ள வேண்டும்.என்றார்.

கொரோனா பாதிப்பு சுமையை கையாள்வதில்..

வேலூரைச் சேர்ந்த மூத்த வைராலஜிஸ்ட் டாக்டர் டி ஜேக்கப் ஜான் கூறுகையில், ஊரடங்கில் கொண்டு வரப்பட்ட தளர்வுகள் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளை அதிகரிக்க வழிவகைச் செய்துள்ளது என்றார். கொரோனா பாதிப்பு சுமையை கையாள்வது குறித்து மூத்த நீரிழிவு நிபுணர் டாக்டர் வி மோகன் கூறுகையில், கொரோனா பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளவர்களுக்கு பாதுகாப்பு வலைகள் விரிவாக்கப்பட வேண்டும். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு உதவ சுகாதார பணியாளர்களுடன் குடும்பத்தினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

அனுபவங்களைப் பகிர்வது

அசாதாரண சூழ்நிலைக்கு அசாதாரண நடவடிக்கைகள் தேவை தானே. கொரோனா நெருக்கடியில் அசாதாரண நடவடிக்கைகள் குறித்து மூத்த நெப்ராலஜிஸ்ட் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் கூறியதாவது, “ஒரு கொடிய தொற்றுநோய்க்கு மத்தியில், வெற்றி மற்றும் தோல்விகள் குறித்து மருத்துவர்களிடையே விவாதங்களை நாங்கள் காணவில்லை. ஒரு மருத்துவமனைக்கு கொரோனாவில் இருந்து குணப்படுத்தும் சதவீதத்தை அதிகரிக்க உதவிய நெறிமுறைகளையும் அல்லது பலரை சிக்கல்களுக்குள் தள்ளிய மருந்துகளைய பற்றியும்  மருத்துவர்களிடையே கலந்துரையாடல் அவசியம். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறித்து கவனம் செலுத்துவதை விட, மருத்துவர்கள் நோயாளிகளின் கேஸ் சீட்டை பதிவேற்றி விவாதிக்க வேண்டும் ”என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது , “பல மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இருந்தபோதிலும், அனைவரின் நிபுணத்துவமும் பயன்படுத்தப்படுவதில்லை.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காத மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ளலாம். மருத்துவர்கள் பயன்படுத்தும் மறுபயன்பாட்டு மருந்துகளின் பக்க விளைவுகளைப் ஆராய்ந்து பார்க்கலாம் மற்றும் இணையத்திலிருந்து பொருத்தமான மருத்துவ இலக்கியங்களை அலசல் செய்து  சிகிச்சைக்கான குறிப்புகளை சேகரிக்கலாம், ”என்று அவர் கூறினார்.

தெளிவு, வெளிப்படைத்தன்மை

தனிமை வார்டுகள்  மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளின் எண்ணிக்கை குறித்த நிகழ்நேர தகவல்களைக் கொரோனாவுக்கு கிச்சையளிக்கும் மருத்துவமனைகளிடம் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விருப்பமுள்ள கொரோனா நோய் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று மூத்த பொது சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “தனியார் மருத்துவமனைகள் அறிகுறியற்ற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. அறிகுறி நோயாளிகள் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஓடப்படுகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டுமென்றால், தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் கட்டண விவரங்களை தங்களது இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதன் மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவாறு முடிவு எடுப்பர், என்றார்.

சமூக பொறுப்பு

கொரோனாவை கட்டுப்படுத்த சமூக பொறுப்பு மிகவும் முக்கியமானது, இது குறித்து டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், “ கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவும், பரவலை குறைக்கவும் சில விஷயங்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். அதன்படி, அனைவரும் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக வேலை செய்யும் இடங்களிலும் பொது இடங்களிலும் கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவ வேண்டும், ”என்று  கூறினார். அனைவரும் சமூக பொறுப்புகளை உணர்ந்து திறம்பட செயல்பட்டாலே கொரோனாவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது சொல்லப்படாத உண்மையே!!!

Tags : Tamil Nadu ,Control Corona , Experimentation, Isolation, Security, Social Responsibility
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...