×

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா?, தளர்வுகளை அறிவிப்பதா?; மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை...!

சென்னை: நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி) முடிவடைகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் 5வது கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி, தொலைக்காட்சி மூலம் பொதுமக்களுடன் உரையாடுவார். அப்போதுதான் புதிய ஊரடங்கு குறித்து அறிவிப்பையும் வெளியிடுவார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

அந்தந்த மாநில அரசுகளே ஊரடங்கை நீட்டிப்பது அல்லது முடித்துக்கொள்வது குறித்து முடிவுசெய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான கலெக்டர்கள் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், பேருந்து ஓடஅனுமதிப்பது, பொதுமக்களை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதிப்பது, தடை திறக்கும் நேரத்தை அதிகரிப்பது உள்ளிட்ட சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்று வலியுறுத்தினர்.

இதுவரை மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில்தான் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது புதிய முடிவுகளை எடுக்க முடியாமல் தமிழக அரசு குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில், 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்து வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, புதிய தளர்வுகளை அறிவிப்பது உள்ளிட்டவை குறித்து இன்று மாலை அல்லது நாளை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன் (26ம் தேதி) மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், ஒரே வாரத்தில் 2வது முறையாக இன்று மீண்டும் ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,re-consultation ,professionals ,CM , Extending curfew in Tamil Nadu, announcing relaxation ?; CM's re-consultation with medical professionals ...
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...