தாராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் சூறாவளிகாற்றுடன் கனமழை; கோழிப்பண்ணை சரிந்து விழுந்தது: 2 ஆடுகள் பலி

தாராபுரம்: தாராபுரம் சுற்று வட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் கோழிப்பண்ணை சரிந்து விழுந்து சேதமடைந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கரூர் செல்லும் சாலையில் உள்ள மருதக்கவுண்டன் வலசு, ஆலாம்பாளையம், பெரமியம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று அதிகாலை 4 மணி வரை இடி, மின்னல், கன மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது. சூறாவளி காற்றால் மருதக்கவுண்டன் வலசு கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் மேற்கூரை ஓடுகள் பறந்து உடைந்து சேதமடைந்தன. மேலும், கால்நடைகளுக்கான சோளத்தட்டுகளை மூடி வைத்து பாதுகாக்க பயன்படுத்தப்பட்டு வந்த இரும்புத் தகடுகள் காற்றில் பறந்தன.

ஆலாம்பாளையம் கிராமத்தில் கிணத்துகாட்டு தோட்டம் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோழிப்பண்ணை அடியோடு சாய்ந்து தரைமட்டமானது.  வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டது. இதேபோல் ஆலாம்பாளையம் பகுதியில்  10க்கும் மேற்பட்ட வீட்டு ஓடுகள் உடைந்து நொறுங்கின.  50 ஆண்டுகால மரங்கள் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்தன. பெரமியம் கிராமத்தில் ஏராளமான வீடுகளின் மீது மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து பள்ளி வளாகத்திற்குள்ளேயே விழுந்தன. ஆடுகளை அடைத்து வைத்திருந்த பட்டியின் மீது மரம் விழுந்ததில் 2 ஆடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தன. நேற்று தாராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றால் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு ரூ. 30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: