×

சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது கனமழை வாழை, தென்னை மரங்கள் நாசம்

* அறுவடை நேரத்தில் பாதிப்பால் விவசாயிகள் கண்ணீர்
* மரம் விழுந்து கொடைக்கானல் போக்குவரத்து பாதிப்பு

 திருமங்கலம்:  திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரக்கணக்கான வாழைமரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்து விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.    மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையில் தொடர்ந்து கனமழை பெய்தது. இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகாக்களில் பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்துவங்கியது. திருமங்கலம் நகரில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்த கனமழை சூறாவளிக் காற்றுடன் பல்வேறு இடங்களிலும் பெய்ததில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. கள்ளிக்குடி அருகே கே.வெள்ளாகுளம், ராயபாளையம், திரளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கில் வாழைகள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒடிந்து விழுந்தன. கே.வெள்ளாகுளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘ஓராண்டிற்கு முன்பு வாழை பயிரிட்டேன். காய்கள் காய்த்து இன்னும் பத்து தினங்களில் அறுவடை செய்ய இருந்தேன். இந்நேரத்தில் சூறாவளிகாற்றில் வாழை ஒடிந்து கடும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளது. கடன் வாங்கி வாழை சாகுபடி செய்தேன். தற்போது கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளேன். எனக்கு மட்டுமே ரூ.4 லட்சம் வரையில் நஷ்டம் உண்டாகியுள்ளது’’ என்றார்.

இதே கிராமத்தை சேர்ந்த வாழை விவசாயி நாக ஜோதிலட்சுமி கூறும்போது, ‘‘நான் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டுள்ளேன். ஒரு ஏக்கரில் பப்பாளி வளர்த்து வந்தேன். ஒரு நாள் சூறாவளி காற்றில் வாழை அடியோடு சாய்ந்துவிட்டது. பப்பாளியும் ஒடிந்து சேதமாகி விட்டது. கடும் நஷ்டத்திற்கு ஆளாக்கி விட்டது’’ என்றார். திரளி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி, ராயபாளையம் மனோகரன் ஆகியோரது வாழைத் தோப்புகளிலும் மரங்கள் ஒடிந்து தோட்டமே நாசமானது. இதில் இவர்கள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். தகவல் அறிந்த விஏஓக்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இக்கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டங்களை கணக்கெடுத்தனர்.  கிராமத்தினர் கூறும்போது, ‘‘வாழை விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிற எங்களுக்கு கணக்கெடுப்புடன் விட்டு விடாமல், உரிய நிவாரணம் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற னர்.மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை கொட்டியது. மழைக்கு தேனி தீயணைப்பு நிலையம் இடிந்து விழுந்தது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார். மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும்பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன், வாழை உள்ளிட்ட விவசாயம் பெரும் பாதிப்பிற்கு ஆளானது.

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால், கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையான பெருமாள்மலை பகுதியில் நேற்று மாலை திடீரென்று ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த பகுதியின் வழியாகத்தான் காய்கறி மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து பிரதானமாக நடைபெறுகிறது. மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் இப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.

குன்றத்தில் ‘அருவி’
திருப்பரங்குன்றம் பகுதியில் பெய்த கனமழையால் திருப்பரங்குன்றம் மலையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து அருவியைப்போல ஆங்காங்கே வழிந்தோடியது. மலை மீதான காசி விசுவநாதர் கோயிலில் பெய்த மழைநீர், படிக்கட்டுகள் வழி அருவிபோல கீழிறங்கியது.

கள்ளிக்குடி தான் ‘டாப்’
மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மொத்த மழையளவு 79.08 செ.மீட்டர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கள்ளிக்குடியில் 116.40 மி.மீட்டர், அதாவது 11.6 செ.மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. மதுரை நகரில் மட்டுமே 84.30 மி.மீட்டர் அதாவது 8 செ.மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.  மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):  இடையபட்டி 105, திருமங்கலம் 83.60, பேரையூர் 81, தல்லாகுளம் 80.50, விமானநிலையம் 63, சோழவந்தான் 31, உசிலம்பட்டி 25.40, சிட்டம்பட்டி 22.80, ஆண்டிப்பட்டி 22.60, தனியாமங்கலம் 21, வாடிப்பட்டி 20, மேட்டுப்பட்டி 16, கள்ளந்திரி 12.80, மேலூர் 7, புலிப்பட்டி 6.40.

வேருடன் சாய்ந்த பப்பாளி
தேனி மாவட்டம்  பெரியகுளத்தை அடுத்த லெட்சுமிபுரம் அருகே உள்ள கோம்பை பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழைக்கு, விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பப்பாளி மரங்கள் ஒடிந்து விழுந்தன.விவசாயிகள் கூறும்போது, ‘‘சூறாவளியுடன் பெய்த கனமழைக்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பப்பாளி, வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன, கொரோனா ஊரடங்கால் பெரும் இழப்பை சந்தித்து வந்த நிலையில், தற்போது சூறாவளி காற்றால் மேலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Heavy rains banana,coconut palm trees ,destroyed
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு