காய்கறி வரத்து அதிகரிப்பு விற்பனையோ மந்தம்: விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்பு

நாகர்கோவில்:  குமரிக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் விற்பனை மந்தமாக நடப்பதால், வியாபாரிகள், விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  இந்தியாவில் பரவிய கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தற்ேபாது ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வருகிறது. ஆனாலும் பொருளாதாரத்தில் மக்கள் நிலை குலைந்துள்ளனர். அதுபோல் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ஆட்டம் கண்டுள்ளன.  கட்டுப்பாடுகளுடன் சுபமூகூர்த்தம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு தொடங்கிய நிலையில் வடசேரி கனகமூலம் சந்தை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தற்போதும் பஸ் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு தொடங்கிய காலகட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவு வந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இதனால் காய்கறி விற்பனை அதிக அளவு விற்பனை ஆனது. பின்னர் டெம்போக்கள் மூலம் கிராமம், கிராமமாக காய்கறி விற்பனை தொடங்கியது. மேலும் மாவட்டத்தில் காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட பிறகு வடசேரி பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகள் விற்பனை குறைந்தது.

 தற்போது காய்கறிகளின் வரத்து அதிக அளவு இருக்கிறது. சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் அதிக அளவு நடக்கும். இந்த காலகட்டத்தில் காய்கறி, வாழைகுலைகள் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களின் தேவைகள் அதிகமாக இருக்கும். ஆனால் கொரோனாவால் திருமண நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் தடைப்பட்டுள்ளதால்,  காய்கறிகளின் விற்பனையும் தடைப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காய்கறி விலை குறைந்துள்ளது, ஆனால் விற்பனை கூடாமல், சரிந்துள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை விவரம் வருமாறு: வரிகத்தரிக்காய் ₹20, நாட்டு கத்தரிக்காய் ₹40, ஆப்பிள் தக்காளி ₹17, நாட்டு தக்காளி ₹15, வெண்டைக்காய் ₹24, வெள்ளரிக்காய் ₹10, பீன்ஸ் ₹70, கேரட் ₹30, வழுதனை ₹25, பீட்ரூட் ₹20, சவ்சவ் ₹25, முள்ளங்கி ₹30, சீனி அவரை ₹30, கோழிஅவரை ₹60, முட்டைகோஸ் ₹15, இஞ்சி ₹60, நீளமிளகாய் ₹30, உருட்டு மிளகாய் ₹35, காலிபிளவர் ₹30, பூசணிக்காய் ₹10, புடலங்காய் ₹20, சேனைகிழங்கு ₹20, பாவற்காய் ₹50, கோவக்காய் ₹20, சின்னவெங்காயம் ₹35, உருளை கிழங்கு ₹26, பல்லாரி ₹13, தடியங்காய் ₹10, மாங்காய் ₹5, நெல்லிக்காய் ₹40, எலுமிச்சை ₹55, முருங்கைக்காய் ₹20.

 இது குறித்து காய்கறி வியாபாரி ரமேஷ் கூறியதாவது:  கொரோனா ஊரடங்கின்போது சுமார் 15 நாட்கள் காய்கறி அதிக அளவு விற்பனையானது. தற்போது மாவட்டம் முழுவதும் கடைகள் திறக்கப்பட்டதாலும், டெம்போக்களில் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருவதாலும் விற்பனை குறைந்துள்ளது.  சுபநிகழ்ச்சிக்கு விற்பனையாகவேண்டிய காய்கறிகள் விற்பனையாகவில்லை. காய்கறிகளின் விலை குறைந்த நிலையில் தற்போது பீன்ஸ் விலை உயர்ந்துள்ளது, மற்ற காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. சுபநிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள் தடைப்பட்டதால், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: