300 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பணிகள் தொடங்கியது 61 கிராமங்கள் வழியாக செல்லும் பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் : அதிகாரிகள் நேரில் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள் வழியாக செல்லும் பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் 300 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நேற்று தொடங்கியது. இந்த பணிகளை அந்தந்த தாலுகா தாசில்தார்கள் ஆய்வு செய்தனர். கர்நாடக மாநிலம் நந்திமலையில் உள்ள சிக்கபல்லாபுரம் என்ற பகுதியில் பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில் 93 கி.மீ தூரம், ஆந்திராவில் 33 கி.மீ தூரம் பயணிக்கும் பாலாறு தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமம் வழியாக வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ தூரம் செல்கிறது. இதன் மூலமாக மேற்கண்ட மாவட்டங்கள் குடிநீர் மற்றும் விவசாயத் தொழிலின் நீராதாரமாக விளங்கி வருகிறது.வேலூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 10ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த பாலாற்றின் நீராதாரத்தின் அடிப்படையில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. விவசாயத்தை வேரோடு அழிக்கும் வகையில் மணல் கொள்ளை இரவு, பகலாக நடக்கிறது. மேலும் மணல் குவாரிகளாலும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மணல் சுரண்டியதால் சீமைக்கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்து பாலாறே தெரியாத அளவுக்கு உருமாறி உள்ளது.

இதையடுத்து ‘பாலாறு பாதுகாப்போம்’ செயல்திட்டத்தின் மூலமாக பாலாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும்படி தாசில்தார்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் சத்துவாச்சாரி பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விஏஓ கனகராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் கூறுகையில், கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் ‘பாலாறு பாதுகாப்போம்’ செயல்திட்டத்தின் மூலமாக பாலாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அன்பூண்டியில் இருந்து பெருமுகை வரை 16 கி.மீ தூரத்திற்கு பாலாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும்.

இந்த பணியில் 10 பொக்லேன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 3 நாட்களில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் முடிக்கப்படும், என்றார்.  காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பாலாறு பகுதியில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதேபோல், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு தாசில்தார்கள் தலைமையில் பாலாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

62.5 கி.மீ நீளத்திற்கு தூய்மை பணி

வேலூர் மாவட்டத்தில் பாலாறு மற்றும் அதன் துணைஆறுகளான அகரம், மலட்டாறு, கவுன்டன்ய மகாநதி, பொன்னை ஆறு, கானாறு மற்றும் நாகநதி ஆறுகள் ஆகியவை பாலாற்று நீர் ஆதாரமாக விளங்குகிறது. எனவே பாலாற்றில் 62.5 கி.மீ நீளத்திற்கு முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி ெதாடங்கியுள்ளது. அதோடு பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் பணிகள் பாலாற்றினை பாதுகாப்போம் என்ற திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories: