பாதித்தோர் எண்ணிக்கையை மறைப்பதாக குற்றச்சாட்டு கட்டுப்பாடின்றி திரிபவர்களால் அதிதீவிரமாக பரவும் கொரோனா: தடுப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் மெத்தனம்

சேலம்: தமிழகத்தில்,ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதிக்காமல் சுற்றித் திரிபவர்களால் அதிதீவிரமாக கொரோனா பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இந்தியாவில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் கொரோனா நோய் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கையை அரசு எடுக்கத் தொடங்கியது. மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். பிறகு 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடியும் நிலையில், மீண்டும் நீட்டிக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில் வெளி நாட்டில் இருந்து வந்த நபர்களுக்கு மட்டும் கொரோனா இருந்தது. இதுவே நாட்கள் செல்ல செல்ல,தொற்று நோயாக மிக வேகமாக பரவி வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது 100 சதவீதம் அதிவேகமாக பரவுகிறது. இதனால் பொதுமக்கள், உயிர் பயத்துடனே வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் 19,400 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 145 பேர் பலியாகியுள்ளனர். ஆரம்பத்தில் அங்கொன்று, இங்கொன்றாக கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டபோது, ஊரடங்கை மக்கள் மிகச் சரியாக நோய் தொற்று பயத்துடன் பின்பற்றினார்கள். ஆனால், அடுத்தடுத்து கடைகள் திறக்கவும், வாகனங்களில் செல்லவும் வழங்கப்பட்ட தளர்வுகளின் மூலம் பொதுமக்கள், ஊரடங்கு உத்தரவையோ,நோய் தொற்று வந்துவிடும் என்ற பயத்தையோ சற்றும் சிந்திக்காமல் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார்கள். மக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்த அசாத்தியம், கொரோனா பரவலை அதிதீவிரமாக மாற்றியிருக்கிறது.

சென்னையில்,கோயம்பேடு மார்க்கெட் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வந்துள்ளது. அதேபோல், பிற மாவட்டங்களை பொறுத்தளவில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திரும்பி வந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி செல்கிறது. இதனால்,அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக மின்னல் வேகத்தில் எகிறுகிறது. வெளி மாநிலம்,மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தனிமைப்படுத்தி,பரிசோதித்து கொரோனாவை கண்டறிகிறோம் என ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால்,அப்படி நடந்ததாக தெரியவில்லை. வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களை முகாமிற்கு அழைத்துச் சென்று, கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரியை எடுக்கின்றனர். பிறகு அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தி வைக்காமல்,வீட்டுக்கு செல்லுங்கள் எனக்கூறி அதிகாரிகள் அனுப்பி விடுகின்றனர். பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என வந்தவுடன் அந்த நபரை வீட்டிற்கு சென்று அழைத்து வந்து, மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர், வீட்டில் தங்கியிருக்கும் நாட்களில் பலருடன் நெருக்கமாகவே இருக்கிறார். இதன்மூலம் அவரை சார்ந்த குடும்பத்தினர், நண்பர்கள்,வெளியே சென்ற இடங்களில் சந்தித்தவர்கள் என சங்கிலி தொடராக பலருக்கு கொரோனா பரவி வருகிறது. இச்சூழல் தான்,தற்போது மாநிலம் முழுவதும் நிலவுகிறது.

சேலம் மாவட்டத்தில், வெளி மாநிலங்களில், மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை முகாமிற்கு அழைத்துச் சென்று, பரிசோதித்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டனர். அவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் 35 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சையில் குணமாகி வீட்டிற்கு சென்றநிலையில், நேற்றைய கணக்குபடி அரசு மருத்துவமனையில் புதிதாக தொற்று ஏற்பட்ட 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் விவரங்களை அதிகாரிகள் மறைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தினமும் சுகாதாரத்துறை வெளியிடும் நோயாளிகள் எண்ணிக்கை விவரத்திற்கும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை கணக்கில் சேர்ப்பதில்லை எனவும் கூறுகின்றனர். முதலில்,கொரோனா நோய் வந்தவர்களின் விவரங்களை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது,நோயாளிகள் எத்தனை பேர் என்ற விவரத்தை மாற்றி மாற்றி கூறுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிகிச்சை பெறும் நபர்களை வெளி மாநில பட்டியல், பிற மாவட்ட பட்டியல் என கணக்கு காட்டுகின்றனர். பாதிக்கப்பட்டோரின் விவரங்களை மறைப்பது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறத்தில் மக்களிடம் அரசின் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் படிப்படியாக குறைந்திருப்பதை காண முடிகிறது.

 சேலம் மாநகர பகுதியில்,காலை, மாலை வேளையில் திருவிழா கூட்டம் போல் மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். கடைகள்,தொழிற்சாலைகள் திறந்தாலும், கட்டுப்பாட்டுடன் தேவைக்கு ஏற்ப வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் யாரிடமும் இல்லை. மக்களிடம் கட்டுப்பாடு இல்லாததால் தான், கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. சாலைகளில், குடியிருப்புகளில் கிருமிநாசினி தெளித்தனர். பாதிக்கப்பட்ட நபர் இருந்த பகுதியை முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, கண்காணித்தனர். ஆனால்,தற்போது தடுப்பு நடவடிக்கை என்பது மெத்தன போக்காக மாறியுள்ளது. கிருமிநாசினி தெளிப்பு,பாதிக்கப்பட்ட நபர் வசித்த பகுதிக்கான கட்டுப்பாடுகள் சரிவர பின்பற்றப்படவில்லை. இதுவே கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்ய காரணமாகிறது. எனவே மக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்து, தேவையின்றி வெளியில் சுற்றுவதை தவிர்த்தால் தான்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த இயலும். இல்லையென்றால் சமூக பரவலாக மாறுவதை தடுக்க இயலாது. அதேவேளையில் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்து, கடுமையாக பின்பற்றினால் தான் தடுப்பு நடவடிக்கை சரியாக அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் இருந்தவர்களே சிகிச்சைக்கு சேர்ப்பு

சேலத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை வீட்டில் இருந்தே சிகிச்சைக்கு சுகாதாரத்துறையினர் அழைத்து வந்துள்ளனர். காடையாம்பட்டி, அழகாபுரம், அம்மாபேட்டை, முள்ளுவாடிகேட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நோயாளிகளை வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் சென்றனர். ஆனால் அதிகாரிகள், இந்த நபர்களை செக்போஸ்ட்களில் மடக்கி தனிமைப்படுத்தி வைத்து, நோய் தொற்றை கண்டறிந்து அங்கிருந்தே மருத்துவமனையில் சேர்த்தோம் எனக்கூறுகின்றனர்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்தால் தகவல் தெரிவியுங்கள்

சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் நிர்மல்சன் கூறுகையில், ‘‘சேலத்திற்கு வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்துகிறோம்.இதற்காக 26 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்துள்ளோம்.கருப்பூர்,தலைவாசல், மல்லூர் உள்ளிட்ட 6 இடங்களில் பரிசோதனை செய்கிறோம். வெளியூர்களில் இருந்து உறவினர்களை வரவழைப்பதை தவிருங்கள்.மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் தான்,எங்களால் நோயை கட்டுப்படுத்த இயலும்.பக்கத்து வீட்டிற்கு தானே,வெளி மாநிலத்தில் இருந்து ஆள் வந்துள்ளார். நமக்கு என்ன ஆக போகிறது என யாரும் இருக்க வேண்டாம். கொரோனாவை காம்பவுண்ட் சுவரால் கட்டுப்படுத்த இயலாது. அது மூச்சுக்காற்றின் மூலம் பரவும். தற்போது வரை சேலத்தில் வெளியில் இருந்து வந்தவர்களுக்கு தான் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.இங்குள்ள நபர்கள் யாருக்கும் புதிதாக நோய் தொற்று வரவில்லை’’ என்றார்.

Related Stories: