போக்குவரத்து இல்லாததால் பூக்களின் விலை வீழ்ச்சி: மல்லிகை கிலோ ரூ.200க்கு விற்பனை

திண்டுக்கல்: கொரானா தொற்று காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த மார்க்கெட்டிற்கு வெள்ளோடு, நரசிங்கபுரம், சின்னாளபட்டி, பெருமாள்கோயில்பட்டி, செட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளிப்பூக்கள் நாளொன்றுக்கு 40 டன் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருவது

வழக்கம். மேலும் இங்கிருந்து பூக்களை திருச்சி, கோவை, சீர்காழி, சிதம்பரம், புதுக்கோட்டை, சென்னை உட்பட தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வார்கள். கடந்த இரண்டு மாதங்களாக பூ மார்க்கெட் செயல்படாத நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்போது தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. செடியில் விளையக்கூடிய பூக்கள் ஒரு நாளுக்கு மேல் தாங்காது அழுகிவிடும். எனவே, பூக்களை பயிர் செய்த 80 சதவீத விவசாயிகள் பெரும் நஷ்டத்தின் காரணமாக பூச்செடிகளை அழித்து விட்டு மாற்றுப்பயிருக்கு சென்றுவிட்டனர்.

தற்பொழுது 20 சதவீத விவசாயிகளே பூக்களை பயிர் செய்கின்றனர். தற்பொழுது விசேஷ காலங்கள் என்பதால் பூ மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிக அளவில் இருக்கும். ஆனால் கொரோனா பாதிப்பு என்பதால் வெளியூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்திற்குள் மட்டுமே பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தற்காலிக பூ மார்க்கெட்டிற்க்கு ஒரு டன் பூக்களே விற்பனைக்கு வருகின்றது. விசேஷ காலங்களில் பூக்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். தற்போது போதிய விலை இல்லாமல் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்சமயம் ரூ 700க்கு விற்பனை ஆகக்கூடிய மல்லிகைபூ ரூ.200க்கு விற்பனையாகிறது. அதேபோல் ரூ.300க்கு விற்பனையாக கூடிய கனகாம்பரம் ரூ.100க்கு விற்பனையாகிறது. ரூ.200 விற்பனையாக வேண்டிய சம்மங்கி ரூ.10 க்கு விற்பனையாகிறது. ரூ.300க்கு விற்பனையாக கூடிய முல்லை 120க்கு விற்பனையாகிறது. ரூ.150க்கு விற்பனையாக கூடிய ரோஜாப்பூ 30க்கு விற்பனையாகிறது. இதேபோல் அனைத்து பூக்களின் விலைகளும் குறைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்த விவசாயிகளுக்கு எடுத்துவரும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு பூக்கள் பயிர் செய்கின்ற விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: