மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்ட நிதி இருக்கு...இடமில்லை: வெயில், மழையில் வீரர்கள் தவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்தும் நிலைய கட்டிடம் கட்ட இடமில்லாததால், தீயணைப்புத்துறையில் கார் செட் பகுதியில் தவித்து வருகின்றனர்.  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். சுற்றுலா வரும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் கோயிலிலைச் சுற்றி பார்த்து விட்டு செல்வது வழக்கும். புகழ் பெற்ற கோயிலில் பாதுகாப்பு கருதி தீயணைப்பு நிலையம் தேவை என சட்டசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு சமீபத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டது.

 தற்காலிகமாக போதிய இடமில்லாமல் மேற்கு கோபுர வாசலில் உள்ள ஒரு கார் செட் பகுதியில் இயக்கப்பட்டது. இந்த நிலை தொடர்ந்து வருகிறது. கோயிலில் மிக பெரிய சம்பவமாக கடந்த 2018ம் ஆண்டு பிப்.2ம் தேதி கிழக்குப் பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

 அதன் பின்னர் 2வது சம்பவமாக நேற்று முன்தினம் இரவு கிழக்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை மீனாட்சியம்மன் கோயில் தீயைணைப்பு வாகனம் உட்பட 5 வாகனங்கள் பல மணி நேரம் போராடி அணைத்தன. தொடந்து தீ விபத்துக்கள் நடப்பதால் கோயில் தீயணைப்பு நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டிட வசதி செய்து கொடுத்து, வெயில், மழையில் இருந்து வாகனத்தை காக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. * இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வீரர்கள் அமர கூட இடம் பற்றாக்குறையாக உள்ளது. தீயணைப்பு உபகரணங்களை வைத்து பாதுகாக்க முடியாத இடமாக உள்ளது. இருக்கும் இடம் கார் செட் என்பதால் வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது. வாகனமும் பல ஆயிரம் செலவு செய்து எப்சி எடுக்கப்பட்ட நிலையில் நிறுத்த இடமில்லை. வெயிலில் நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால் கட்டிடம் கட்ட இடமில்லை. கிழக்கு கோபுர பகுதியில் செயல்பட்டு வந்த மண் பரிசோதனை மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு அவர்கள் சென்று விட்டால் அந்த இடம் காலியாகி விடும். அந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டால், நிரந்தர கட்டிடம் தீயணைப்பு நிலையத்திற்கு கிடைக்கும். அதற்கு கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தெற்கு கோபுர பகுதியில் உள்ள பழைய எஸ்பி அலுவலக பகுதியில் கட்டிடம் காலியாக உள்ளது. அதில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யலாம். அதுவும் தர முடியாது என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்து விட்டது. தற்போது நிதி இருந்தும், இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய முன் வரவேண்டும்’’ என்றார். 

Related Stories: