கைக்கு எட்டியது... வாய்க்கு எட்டலையே.... மட்டை ஆனது ஆன்லைன் ‘ஆப்’ அப்செட்டான கேரள குடிமகன்கள்: மூணாறில் மதுபான கடைகள் ‘வெறிச்’

மூணாறு: கேரளாவில் மது வாங்கும் முன்பதிவு செயலியான ‘பெவ் கியூ’வில் ஏற்பட்ட கோளாறால், டோக்கன் பெற்று மது வாங்கமுடியாமல் குடிமகன்கள் கடும் ஏமாற்றமடைந்தனர். இதனால் மூணாறு பகுதிகளில் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை முடங்கியது. கேரள மாநிலத்தில், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள், பார்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. குடிமகன்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த அம்மாநில அரசு, ‘பெவ் கியூ’ என்ற செயலியை அறிமுகம் செய்தது. கொச்சியில் செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவன உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த செயலியை கூகுள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து மது வாங்கும் நபரின் பெயர், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். பின்னர் கிடைக்கும் டோக்கன் மூலம் மது வாங்கலாம் என கேரள அரசு அறிவித்தது. இம்முறையில் மது வாங்குவதற்காக நேற்று முன்தினம் மட்டும் 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் டோக்கன் பதிவு செய்யும் ‘பெவ் கியூ’ செயலியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், காலை முதல் செயலியில் முன்பதிவுக்கு முயன்ற குடிமகன்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். டோக்கன் பெறமுடியாமல் சோர்ந்தனர். குடிமகன்கள் வராததால் மூணாறு, தேவிகுளம், பூப்பாறை, சூரியநல்லி, அடிமாலி ஆகிய பகுதிகளில் அரசு மதுக்கடைகள் வெறிச்சோடின. மது வாங்க உற்சாகமாக செயலியை டவுன்லோடு செய்திருந்த குடிமகன்கள், கடைசிக்கட்ட கோளாறால் கடும் ஏமாற்றம் அடைந்தனர். செயலி திட்டத்தை வாபஸ் வாங்கக்கோரி மாநிலம் முழுவதும் நேற்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக கலால் துறை அமைச்சரின் ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ‘‘பெவ் கியூ செயலி மூலம் மது வாங்கும் முறையை வாபஸ் வாங்க முடியாது. இரவுக்குள் செயலியில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்படும்’’ என அறிவிப்பு வெளியானது.

Related Stories: