×

ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், உலக அளவில் புகையிலைப் பழக்கம் பெரும் தீங்காகவும், பேராபத்தாகவும் மாறிக்கொண்டே வருகிறது. குறிப்பாக புகையிலைப் பழக்கத்திற்கு சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் வெகுமக்கள் ஊடகங்கள் வழியாக செய்யப்படும் மறைமுக விளம்பரங்கள் ஆபத்தானவை. எனவே அவை தடுக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.

புகையிலைப் பழக்கம் கொரோனாவை விட மிக மோசமான உயிர்க்கொல்லி நோயாகும். புகையிலையால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் புகையிலைக்கு உயிரிழக்கின்றனர். அதாவது இந்தியாவில் 10 பேர் உயிரிழந்தால் அவர்களில் ஒருவரின் மரணத்திற்கு புகையிலை தான் காரணமாக இருக்கிறது. புகையிலை பழக்கத்திற்கு மனிதர்கள் அடிமையாவதை தொற்றவைக்கப்படும் நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மனிதர்கள் அடிமையாவதை தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக விளையாட்டுகள், விளம்பரங்கள் மூலம் சிறுவர்கள் மீது புகையிலைப் பழக்கம் திணிக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது என அன்புமணி தெரிவித்தார்.

புகையிலைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் தான் சிறுவர்கள் மீது புகையிலை பொருட்களை அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் திணித்து வருகின்றனர். அதற்காக மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நடப்பாண்டுக்கான புகையிலை ஒழிப்பு முழக்கமாகும். இந்த முழக்கத்திற்கு செயல்வடிவம் தருவது அரசுகளின் கடமையாகும். விளையாட்டுப் போட்டி நடைபெறும் மைதானங்களில் விளம்பரம், விளையாட்டுப் போட்டிகளின் நேரலை ஒளிபரப்பின் போது அந்த விளம்பரங்களை திட்டமிட்டு காட்டுவதும் புகையிலை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களை மீண்டும், மீண்டும் ஒளிபரப்புவது, திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை அமைப்பது ஆகியவற்றின் மூலம் புகையிலைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆவலை சிறுவர்களிடம் புகையிலை நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றனர்.

2019 ஐபிஎல் போட்டிகளின் போது மட்டும் போதைப் பாக்குகள் குறித்த விளம்பரங்கள் 10 ஆயிரத்து 452 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் போது போதைப் பாக்குகள் பற்றிய விளம்பரங்கள் செய்யப்பட்டது குறித்து தமிழக சுகாதாரத்துறைக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் கடிதம் எழுதியுள்ளேன். அதனால் சென்னை சேப்பாக்கம் திடலில் கிரிக்கெட் போட்டிகளின் போது புகையிலைப் பொருட்கள் விளம்பரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து நிலைகளிலும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விளம்பரங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைப் பார்த்து தான் 53 விழுக்காட்டினர் புகைப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் புகைக்கும் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று நான் விடுத்த வேண்டுகோளை சில முன்னணி நடிகர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட இன்னும் சிலர் அத்தகைய காட்சிகளில் தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். இந்தப் போக்கை தமிழ் திரைப்பட நடிகர்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும். கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணையவழி ஒளிபரப்புத் தளங்களில் ஒளிபரப்பாகும் திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுவதில்லை. அதேபோல் ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல நகரங்களில் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் புகையிலை விளம்பரங்களை காட்சிக்கு வைத்துள்ளன. இவை புகையிலைப் பழக்கத்திற்கு சிறுவர்களை அடிமையாக்கும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

2004-ம் ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன், பொது இடங்களில் புகைக்க தடை, பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடை, புகையிலை விளம்பரங்களுக்கு தடை, புகையிலை பொருள் விற்கும் கடைகளில் விளம்பரங்களுக்கு தடை, புகையிலை பொருட்கள் மீது எச்சரிக்கை படம், புகையிலைக்கு அதிக வரி, சிறுவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்க தடை, குட்காவுக்குத் தடை, திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும்போது எச்சரிக்கை வாசகங்களைக் காட்டுவதை கட்டாயமாக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டேன். இந்தியாவில் புகையிலைப் பழக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் என்று 2005-ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்த நிலையில், நான் மேற்கொண்ட நடவடிக்கைகளால் புகைப்பிடிப்போர் விகிதம் 2005-ம் ஆண்டின் அளவான 38 விழுக்காட்டிலிருந்து 2015-ம் ஆண்டில் 28% ஆக குறைந்துள்ளது. 2025-ம் ஆண்டில் இது 22% ஆக குறையக்கூடும். புகையிலைப் பழக்கம் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அதை கடுமையாக குறைத்தது பெருமிதம் அளிக்கிறது.

அரும்பாடு பட்டு படைக்கப்பட்ட இத்தகைய சாதனைகள் வீணடிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது. அதற்காக நான் மத்திய அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட விதிகளை முழுமையாக செயல்படுத்துவது மட்டுமின்றி, விளையாட்டுகள், வெகுமக்கள் ஊடகங்கள், பொதுவெளிகள், கடைகள் ஆகியவற்றில் மறைமுக விளம்பரங்கள் மூலமாக சிறுவர்கள் மீது புகையிலைப் பொருட்கள் திணிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அப்பாவிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

Tags : Children ,Children: Anumani Ramadas , Media, boys, tobacco, prevent, anhmani ramadas, insistence
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...