10,12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை வெளியீடு; தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை : கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 62 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா தொற்று அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையிலான குழு முடிவு செய்யும். பள்ளி வேலை நாட்களுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் குறைக்கப்படும். 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: