உச்சநீதிமன்ற கொலிஜியத்தை மதிக்கின்றோம்; ஆனால் சட்டத்துறை அமைச்சகம் அஞ்சல்நிலையம் போல் செயல்படாது: ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்

டெல்லி: நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் சட்டத்துறை அமைச்சகம் அஞ்சல்நிலையம் போல் செயல்படாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். புதுடெல்லியி்ல் நேற்று நடந்த அகில பாரதிய அதிவக்த பரிசத்தின் பேராசிரியர் என்ஆர். மாதவ மேனன் நினைவு கருத்தரங்கில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பங்கேற்றார். இந்தியாவில் கொரோனாவுக்குப்பின் சட்டம் மற்றும் டிஜிட்டல் துறைகள் சவால்கள் குறித்த தலைப்பில் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து பாலினத்தாரும் வயது வேறுபாடில்லாமல் சென்று வழிபாடு நடத்தலாம் என்ற தீர்ப்பை பேராசிரியர் மேனன் தீவிரமாக எதிர்த்தார். மக்களின் நம்பிக்கையில் தலையிடும்போது நீதிமன்றம் தயக்கத்துடனே அணுக வேண்டும் எனவும் கூறினார். மக்கள் கடைபிடிக்கும் நம்பிக்கைகள் ஏற்க முடியாததாக, தன்னிட்சையாக, அரசியலமைப்புக்கு மாறாக இருந்தால் அதில் தலையிடலாம். ஆனால் மக்களின் நம்பிக்கைகள் மீது தீர்ப்பளிக்கத் தொடங்கினால் வழுக்கும் சாலையில் கால் வைப்பதாகும் என மேனன் தெரிவித்திருந்தார். நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு தொடர்பில்லாதது அதை மாற்றியமைத்து காலத்துக்கு ஏற்றார்போல் பயனுள்ளதாகக் கொண்டுவர வேண்டும் என மேனன் விரும்பினார்.

நீதிபதிகளை நியமிக்கும் தேசிய நீதிபதிகள் ஆணையத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக அரசு கொண்டு வந்ததாகும். இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். ஆனால் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம். ஆனால் அந்த தீர்ப்புகள் குறித்து விவாதிக்கவும் விரும்புகிறோம். மத்திய அரசு கொண்டு வந்த நீதிபதிகள் ஆணையத்தில் சட்ட அமைச்சரும் ஒரு உறுப்பினராக இருப்பதால் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு வரும்போது ஆணையத்தால் நியமனம் செய்யப்படுபவர்கள் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கமால் இருக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தேசத்தில் ஜனநாயக அடிப்படையில் நிர்வாகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் தான் அரசின் தலைவர் அவருக்கு அவரின் அமைச்சரவை உறுப்பினர்கள் கட்டுப்பட்டவார்கள். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், நீதிபதிகள், ராணுவத் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிப்பதில் பிரதமர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். நாட்டின் புனிதத்தன்மை, கவுரவம் மற்றும் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்வார் என இந்திய மக்கள் நம்புகிறார்கள். நாட்டில் பல விஷயங்களில் பிரதமரை நம்ப முடியும்.

ஆனால் சட்ட அமைச்சரின் உதவியுடன் செயல்படும் பிரதமரை நியாயமான, நடுநிலையான நீதிபதிகளை நியமிப்பதில் நம்ப முடியாது என்று கூறுவது பொத்தாம் பொதுவான கருத்தாகும். இது குறித்து எனக்கு பலதரப்பட்ட கருத்து வேறுபாடுகள் உள்ளன. நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் நீதிபதிகளை நீதிபதிகளே நியமிக்கும் கொலிஜியத்தை மதிக்கிறோம். ஆனால் சட்டத்துறை அமைச்சகம் தபால் அலுவலகம் அல்ல. எனவே நாங்கள் முக்கிய பங்களிப்பாளர்கள் என்பதால் தொடர்ந்து எங்கள் கடமையைச் செய்வோம் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Stories: