புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் வழங்க தி்ட்டம்? மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரோனா வைரஸ் லாக்டவுனால் புலம்பெயர் தொழிலாளர்கள், பிரச்சனைகள், துன்பங்கள் வேதனைகள் இன்னும் தொடர்ந்தால் அவர்களுக்கு நேரடியாக பணத்தை வழங்கும் திட்டத்தை பரிசீலிக்கும் என மத்திய அரசு நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பெரிய நகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்களிலும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டன. இதனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிள்களிலும், ரயில்களிலும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகும் முழுமையாக தொழிற்சாலைகள், சிறு குறுந்தொழில்கள் இயங்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியில்லாமல் வறுமையிலும், பட்டிணியிலும் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸால் வேலையிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியலிட மத்திய தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சகத்திடம் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி கூறுகையில், நிதி பற்றாக்குறையைப் போக்க அதிகமான பணத்த அச்சடித்து மக்களுக்கு வழங்கப்போகிறதா அரசு என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கான சூழல் வந்தவுடன் அந்த முயற்சியும் எடுக்கப்படும் என கூறினார். இப்போதுள்ள சூழலில் ஏழைகள், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்ந்தால் அவர்களை மீ்ட்க நேரடியாக கையில் பணத்தைக் கொடுப்பதுதான் தீர்வாக இருக்கும். ஆனால் இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதால் முடிவெடுக்க ஏற்ற சூழல் இன்னும் வரவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு திட்டம் மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டதாகும். இந்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு திட்டத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது என்று நிதியமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: