×

கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட முதியவர் 5 நாட்களில் உயிரிழந்தார்: சுகாதார துறையினர் மீது குற்றச்சாட்டு

பெரம்பூர்: புளியந்தோப்பில் கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட 76 வயது முதியவர், 5 நாட்களில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு கன்னிகாபுரம் கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்த 76 வயது முதியவருக்கு, சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், கடந்த 21ம் தேதி ரத்த  பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 23ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.  இதனையடுத்து அவரை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுங்கள்,’ என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், முதியவர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், 28ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து  சிகிச்சை அளிக்க வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்களும் கூறிவந்த நிலையில், 76 வயது முதியவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் சிறப்பு வார்டில் அனுமதிக்காமல், வீட்டிலேயே தனிமைப்படுத்தி, முறையாக சிகிச்சை அளிக்காததால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதுமட்டுமின்றி இவரது வீட்டில் இருந்த மேலும் 5 பேருக்கு தற்போது கொரோனா  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இவர்கள் அனைவரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்: சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞர், சலவை தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால், கடந்த 26ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது 28ம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. அன்றிரவே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Tags : home ,health department , orona, died, Health department
× RELATED கொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது