×

முதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர்.  இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

குறிப்பாக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படைந்து வருகிறது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக சார்பில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்  உச்சநீதிமன்றத்தில் நேற்று  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :

 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய தொகுப்பு மாணவர் சேர்க்கையில், அரசுக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3.8 சதவீத இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.  இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்டுள்ள முந்தைய நீட் தேர்வு முடிவுகளை ரத்துசெய்ய வேண்டும். அகில இந்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல  பிற மாநிலங்களில் அந்தந்த மாநில இடஒதுக்கீடு விதிகளைப் பின்பற்ற உத்தரவிடவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த  மனு  உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என தெரியவருகிறது.


Tags : DMK Case in Supreme Court , Masters medical course, students, 50% reservation, Supreme Court, DMK case
× RELATED மருத்துவ படிப்பில் இதர...