×

பயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும்: ரயில்வே பொது மேலாளருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: பயன்படுத்தப்படாத ரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: கொரோனா நோய் தடுப்பையொட்டி மார்ச் 24 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் ரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், விரைவில் புறநகர் ரயில் சேவை துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு ரயில் நிறுத்தங்கள் இடையே பயணம் செய்கிற வகையில் மாதாந்திர ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார்கள். ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரையிலான ரயில்வே சீசன் டிக்கெட்களுக்கான கட்டணங்களை முழுமையாக செலுத்தியே பெற்றிருக்கிறார்கள்.

இந்நிலையில் தொடர்ச்சியாக பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மக்களின் ரயில் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. பணம் கட்டி பெறப்பட்டிருந்த சீசன் டிக்கெட்களை பயன்படுத்த முடியாமல் போனதோடு அவற்றிற்கான காலமும் முடிவடைந்திருக்கிறது. பெரும்பாலும் சிறு வியாபாரம் செய்பவர்கள், முதியோர், மாணவர்கள் மற்றும் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் ஏழை தொழிலாளர்கள் சீசன் டிக்கெட்டுகளால் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

புறநகர் ரயில் சேவை மீண்டும் துவங்கும் போது ஏற்கனவே இவர்களுக்கு ரயில்வே சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கு ஈடாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துத் தர வேண்டும். இது மிகுந்த நியாயமான கோரிக்கையாக இருக்கும் என்பதோடு, இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனுபவித்த சொல்லொண்ணா துயரத்திற்கு ஈடு செய்கிற பேருதவியாக அமையும். புறநகர் ரயில் சேவைகளை துவங்குவதற்கான அறிவிப்பைச் செய்யும் அதேநேரத்தில், ரயில்வே சீசன் டிக்கெட் பயன்பாட்டுக்கான கால அளவை நீடிக்கச் செய்யும் வகையிலான அறிவிப்பினையும் செய்து மக்களுக்கு உதவிட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : Railway General Manager , Railway Season Ticket, Railway General Manager, K. Balakrishnan, Letter
× RELATED கிளாம்பாக்கம் ரயில் நிலையம் 6...