சோதனை செய்வதில் அலட்சியம் காட்டும் அரசு இறுதிக்கட்டத்தில் நோய் தொற்றை கண்டறிவதால் அதிகரிக்கும் மரணம்

* தனியார் மருத்துவமனைகள் விதிமீறல்

* பொதுமக்கள் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்வதில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். கடைசி நேரத்தில் நோய் தொற்றை கண்டறிவதால் அதிக மரணம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. பெரும்பாலான தெருக்களில் கொரோனா நோயாளிகள் இருக்கக்கூடிய ஹாட் ஸ்பாட் பகுதிகளாக மாறி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சுகாதாரத் துறையும் நோய் தொற்றை கட்டுப்படுத்த எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கெல்லாம் அடங்காமல் சென்னை மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்த வைரஸ் தொற்றால் தமிழகத்தில் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கருதப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.  குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கடந்த ஒரு வாரமாகவே பலி எண்ணிக்கை சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்காக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. தமிழக அரசோ மக்கள்தொகை அதிகமாக இருப்பதால்தான் சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறி வருகிறது. ஆனால், கடந்த ஒரு வாரமாகத்தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்வதில் தமிழக அரசு அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும், பரிசோதனை செய்வதில் சென்னை மாநகராட்சியும், தமிழக சுகாதாரத் துறையும் மெத்தனம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அனைத்து அறிகுறி இருந்தால் மட்டுமே நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக, பலருக்கு இறுதிக்கட்டத்தில் மட்டுமே சோதனை செய்யப்படுகிறது. இதன்பிறகு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கடைசி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களில் இறக்கும் நிலை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டி விட்டது. இதில் 50 சதவீதம் பேர் சிகிச்சைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் இறந்தது அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. அப்படி இறந்தவர்கள் எண்ணிக்கை 75க்கும் மேல் இருக்கும். இவர்கள் அனைவரும் அறிகுறி தெரிந்த உடனே மருத்துவரை அணுகியிருந்தாலோ அல்லது நோய் தொற்று இருந்தவர்களுடனான தொடர்பில் இருந்ததை அறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி இருந்தாலோ உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா தொற்று சிகிச்சைக்கு சேர்ந்த 24 மணி நேரத்துக்குள் 25 பேரும், 1வது நாளில் 27 பேரும், 2வது நாளில் 25 பேரும், 3வது நாளில் 18 பேரும், 4வது நாளில் 11 பேரும், 5வது நாளில் 7 பேரும், 6வது நாளில் 9 பேரும் பலியாகியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில்  20-29 வயதுடையவர்களில் ஒருவரும், 30-39 வயதுடையவர்களில் 8 பேரும், 40-49 வயதுடையவர்களில் 21 பேரும், 50-59 வயதுடையவர்களில் 40 பேரும், 60-69 வயதுடையவர்களில் 37 பேரும்  உயிரிழந்துள்ளனர். மேலும், 110 பேருக்கு மேல் சென்னையில் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேநிலை நீடித்தால் சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே தமிழக சுகாதாரத்துறையினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து பரிசோதனைகளை அதிகரித்து  நோய் தொற்றை  கண்டறிந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

தனியார் மருத்துவமனை மரணங்கள் மறைப்பு:

சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால் பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படு பவர்கள் நிலை கவலைக்கிடம் ஆகும்போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர். அவ்வாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் பேர் அடுத்த சில மணி நேரங்களில் மரணம் அடைந்துவிடுகின்றனர். இதனால் இந்த மரணங்கள் அனைத்தும் அரசு மருத்துவமனை கணக்கில் சேர்ந்துவிடுகிறது.

இதை தவிர்த்து தனியார் மருத்துவமனையில் ஏற்படும் பல மரணங்கள் அரசு துணையுடன் மறைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவற்றை எல்லாம் சேர்த்தால் தமிழகத்தில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டும் என்று கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்வதில் சென்னை மாநகராட்சியும், தமிழக சுகாதாரத்துறையும் மெத்தனம் காட்டி வருவதாககூறப்படுகிறது

Related Stories: