×

ஒரு டிஜிபி, 2 ஏடிஜிபிக்கள் மற்றும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்று ஓய்வு

சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருடன் மேலும் ஒரு டிஜிபி மற்றும் 2 ஏடிஜிபிக்களும் ஓய்வு பெறுகின்றனர். தமிழக உளவுத்துறை ஐஜியாக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவரது பணிக்காலம் இன்று மாலையுடன் முடிகிறது. அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அவர் மறுத்து விட்டார். இதனால், போலீஸ் துறைக்கான ஆலோசகர் பணி வழங்கவும் அரசு முடிவு செய்தது. ஆனால், அதையும் வேண்டாம் என்று சத்தியமூர்த்தி மறுத்து விட்டார். அவர், கடந்த அதிமுக ஆட்சியின்போது சசிகலா ஆதரவு பெற்ற அதிகாரிகள் மூலம் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.

தேர்தல் நேரத்தில் அவர் மாற்றப்பட்டார். பின்னர், தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றதும், அவருடன் நெருக்கமாக இருந்தார். தமிழகத்தில் சத்தியமூர்த்திக்கு ஆதரவான அதிகாரிகள் மட்டுமே முக்கியமான பதவியில் அமரமுடியும் என்ற நிலை உருவானது. பலர் பல ஆண்டுகளாக சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

தமிழக காவல்துறையில் சர்வ வல்லமை படைத்தவராக விளங்கிய, சத்தியமூர்த்தி இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் தற்போது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜி பதவியை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் அவர் புதிய உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்படுவார் அல்லது உளவுத்துறை பொறுப்பு ஐஜியாக தற்காலிகமாக நியமிக்கபடுவார். பின்னர் அவருக்கு உளவுத்துறை ஐஜிக்கான பணி மாறுதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 அதேபோல, மனித உரிமை ஆணைய டிஜிபியாக இருந்த லட்சுமி பிரசாத், தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த கே.சி.மாகாளி, காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி சேஷசாய் ஆகியோரும் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். அதில் மாகாளி, ஷகீல் அக்தர், கந்தசாமி, ராஜேஷ்தாஸ் ஆகிய 4 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர்கள் 4 பேருக்கும் இன்றைக்குள் டிஜிபி பதவி உயர்வு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாகாளி, ஏடிஜிபியாகவே இன்று ஓய்வு பெற்று விடுவார். இதனால் தமிழக அரசு இன்றைக்குள் போலீஸ் அதிகாரிகளின் மாற்றத்துக்கான உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : ADGPs ,DGP ,IG Satyamurthy , One DGP, 2 ADGPs, intelligence, IG Satyamurthy, rest
× RELATED கூடுதல் டிஜிபி உள்பட 20 காவலருக்கு கொரோனா