×

பெயருக்குத்தான் நம்ம துறை பெருசு...: நிதி ஆதாரமே இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ புகார்

மதுரை: ‘கூட்டுறவு துறை பெயருக்குதான் பெரிய துறை. ஆனால் நிதி ஆதாரமில்லாத துறை’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் கடந்த 2000ம் ஆண்டு ரூ.33 கோடி திட்ட மதிப்பீட்டில் பழங்காநத்தம் மேம்பாலம் கட்டப்பட்டு, பணிகள் முடிவுறாத நிலையில் உள்ளது. இந்த மேம்பாலத்தில் சமூகவிரோதச் செயல்கள் அதிகமாக நடக்கிறது. அரைகுறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த பாலம் பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, இந்த மேம்பாலத்தினை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறும்போது,

 ‘‘பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் - திருப்பரங்குன்றம் - டிவிஎஸ் நகர் வரை செல்லும் பழங்காநத்தம் மேம்பாலத்தினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும், தனியார் நிலங்களை கையகப்படுத்திய பிறகே கட்டப்பட்டு வருகிறது. மதுரையில் பெய்த கனமழை காரணமாக, நியாய விலை கடைகளில் மக்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை விரட்ட அரசாலும், சட்டத்தாலும் எதுவும் முடியாது. மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும். கூட்டுறவு துறை பெயருக்கு தான் பெரிய துறை, ஆனால் இது நிதி ஆதாரமில்லாத துறை’’ என்றார்.

Tags : Selur Raju , Minister Selur Raju, Co-operative Department
× RELATED நீட் தேர்வுக்கு எனது எதிர்ப்பும்...