×

ஜெயலலிதா வீடு விவகாரம் எனக்கு 4 ஆண்டாக மிரட்டல் : ஜெ.தீபா பரபரப்பு பேட்டி

சென்னை: ஜெயலலிதா இல்ல விவகாரத்தை அதிமுகவினர்தான் அரசியலாக்க நினைக்கின்றனர். எனக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே மிரட்டல்கள் உள்ளன என ஜெ.தீபா பரபரப்பு பேட்டி அளித்தார். சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ஜெயலலிதா இல்ல விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டும் என்றுதான் பலரும் நினைக்கின்றனர். குறிப்பாக, அதிமுகவினர்தான் இதை அரசியல் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இந்த வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வந்துவிட்டது. நேற்று வந்தது திருத்தம்தான். இந்த நேரத்தில் எப்படி வீட்டு வாசலுக்கு வரலாம். இதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அரசு என்னை ஓட ஓட விரட்டி துரத்தும் என்று ஏற்கனவே நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவித்து இருந்தேன். அதற்காகத்தான் கவர்னரிடம் எனக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்து இருந்தேன்.  போயஸ் கார்டன் இல்லத்திற்காக நான் ஒரு வழக்கு தொடர்ந்து இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும்.

அன்று முதல் இன்று வரை அந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று யாருக்கோ ஒரு திட்டம் இருக்கிறது. அது யார் என்பதுகூட தெரியும். இந்த தீர்ப்பு வந்த பிறகுகூட அந்த வீட்டு வாசலுக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளனர். இந்த நேரத்தில் அரசாங்கத்திடம் இரண்டு கேள்வி கேட்கிறேன். போயஸ் கார்டன் தோட்டம் ரோடு பொதுவாக அனைவரும் பயன்படுத்துவது தான். வீட்டை திறக்க சொல்லி வரவில்லை. ரோட்டிற்குதான் வந்தேன். அங்கே வரக்கூடாது என்று சொல்ல முடியாது. ஏற்கனவே கோர்ட் ஆர்டர் இல்லாமல் அங்கே வரமாட்டேன் என்று கூறியிருந்தேன். நேரடி வாரிசு என்று அறிவித்த நிலையில் எனக்கு கடமை இருக்கிறது.  என்ன நடந்தாலும் சட்டரீதியாக சந்திப்பேன். அதைப்பற்றி ஒன்றுமில்லை.

தமிழக மக்களிடம் ஒன்று கேட்கிறேன். இந்த அளவிற்கு பண்ண வேண்டிய அவசியம் என்ன? அவருடைய அண்ணன் மகள், அவருடைய இல்லத்தில் பிறந்து அவர்களால் வளர்க்கப்பட்டேன். அவர்களுடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக்கூடாது என்று, அவர்கள் முகத்தை ஒரு தடவைகூட பார்க்கக் கூடாது என்று செய்தது இந்த அதிமுக அரசுதான். நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டரீதியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்பவே ஆரம்பித்து விட்டார்கள்.

எனக்கு 4 ஆண்டுகளாக மிரட்டல்கள் உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனுக்கு நான் சென்றேன். அதிமுக சார்பில் யாரும் வந்தார்களா, ஜெயலலிதா இறந்த பிறகு கூட அவர்களை அவமானப்படுத்துவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது ஆத்மா சாந்தியடையாமல் செய்கிற வேலையை அதிமுகதான் செய்கிறது. இந்த ஆட்சி உடனடியாக கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு ஜெ.தீபா கூறினார்.

Tags : J. Deepa Jayalalithaa ,J. Deepa , Jayalalithaa, Intimidator, J. Deepa
× RELATED சொத்துக் குவிப்பு வழக்கில்...