சரக்கு கிடைக்கலயேன்னு பதறாதீங்க... ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சு ஏமாறாதீங்க...: டெபிட், கிரெடிட் கார்டு இன்டர்நெட் வங்கி மோசடிகள்

சென்னை: டாஸ்மாக் தொறக்கலையேங்கற கவலையோட, பேஸ்புக்குல எதையாவது தேடும்போது ‘சரக்கு இருக்கு வேணுமா’ன்னு வர்ற மெசேஜ் உங்களை கிறங்கத்துடன் அழைக்கலாம்... அடடான்னு, பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி, நினைக்கும்போதே தேடி வருதேன்னு விழுந்துடாதீங்க... ஏன்னா, இப்படி ஒரு மோசடி கிளம்பிடுச்சு. ஊரடங்கில் பல குடும்பங்களின் வருவாய் பெருமளவு சரிந்து விட்டது. ‘பட்ஜெட் பத்மநாபன்’  ரேஞ்சுக்கு பலர் யோசிக்கவும் திட்டமிடவும் ஆரம்பித்து விட்டனர். ஆனாலும், இவர்கள் பாடுபட்டு வங்கியில் சேர்த்து வைத்துள்ள பணத்தை ‘வலைவீசி’ சுருட்ட, ‘வலைதளங்களில்’ புதுவித மோசடிகள் அரங்கேறி வருகின்றன. ஊரடங்கில் சரக்கு கிடைக்கவில்லையே என நினைக்கும் குடிமகன்களை கூட இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை.

இந்த மோசடி கும்பல், பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் ‘சரக்கு படத்துடன்’ கணக்கை உருவாக்கி, கல்லாவை நிரப்ப வலை விரித்து காத்திருக்கின்றனர்.  குடிமகன்களை நம்ப வைக்க, கூகுள் மேப் உடன் இருக்கும் சரக்கு கடைகளை, முகவரியுடன் அப்படியே தங்களின் முகநூல் படமாக மாற்றி விடுகின்றனர். முகவரி எல்லாம் கூகுளில் உள்ளபடிதான் இருக்கும். ஆனால், போன் நம்பர்கள் மோசடி ஆசாமிகளுடையது. சரக்கு கிடைக்கிறதே என்று பரபரப்பாக போன் செய்தால் போதும், ‘‘சார்... சரக்கு ரெடி. உங்க அட்ரஸ்ச சொல்லுங்க. உடனே அனுப்பிடுறோம். அதுக்கு முன்னாடி, உங்க மொபைல் மூலமாக பணத்தை கட்டிடுங்க.

இதோ உங்க பீம் ஆப்சுக்கு அனுப்பிட்டோம் பாருங்க. அதை அப்படியே ஓகே செய்து பணத்தை கட்டுங்க. இல்லேன்னா, உங்க கார்டு நம்பர் இதுதானே. பின்னாடி இருக்கிற 3 நம்பரையும், உங்க மொபைலுக்கு வரும் ஒருமுறை பாஸ் வேர்டையும் மட்டும் சொல்லுங்க போதும். அடுத்த சில மணி நேரத்தில், ஒரிஜினல் சரக்கு உங்கள் வீட்டுக்கதவை தட்டும்’’ என ஆசைவார்த்தை காட்டுகின்றனர். நம்பி பாஸ்வேர்டு போட்டால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவி விடுவார்கள். இப்படி நிறைய மோசடிகள் அரங்கேற தொடங்கி விட்டன. சில மோசடியாளர்கள், சில ஆயிரங்களை மட்டும் எடுத்து விடுகின்றனர். ஊரடங்கில் மக்களின் தேவையை பயன்படுத்தி, நாடு முழுவதும் பல பகுதிகளில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. பலர் சில ஆயிரங்கள் மட்டும்தானே என புகார் தராமல் விட்டு விடுகின்றனராம்.

 சினிமா புரொடியூசர், கப்பல் படை அதிகாரி கூட இந்த மோசடியில் விழுந்து விட்டார்கள் என்பதுதான் உச்சக்கட்ட அதிர்ச்சி. ஊரடங்கு துவங்கியபோதே, குற்றங்களில் 84 சதவீதம் ஆன்லைன் மூலமாக நடந்துள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உங்களோட பேஸ்புக்குலயும் ஒயின்ஷாப் முகவரி அழைக்குதா... நம்பி ஆர்டர் செஞ்சீங்கன்னா, கணக்குல இருக்குற கொஞ்ச நஞ்ச காசும் போயிடும். உஷாரா இருங்க பாஸ்.  அதுமட்டுமில்ல, பேஸ்புக்கில் பார்த்து உங்கள் நண்பர்களின் விவரங்களை தெரிந்து கொள்ளும் சிலர், கஷ்டத்தில் இருப்பதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறதாம். ஊரடங்கில் பலரது கிரெடிட், டெபிட் கார்டுகள் காலாவதியாகி விட்டன. கார்டு வரலையேன்னு இன்டர்நெட்டுல தேடி கூரியருக்கு போன் பண்ணாதீங்க... அதற்கும் போலி முகவரியை உருவாக்கி வைத்துள்ளனராம்.

Related Stories: