×

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை: அரசு செயலாளர் அவசர கடிதம்

சென்னை: 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 1,458 தினக்கூலி ஊழியர்கள் பணிவரன்முறை செய்யப்பட உள்ளனர். இதுதொடர்பாக, அரசு செயலாளர் மணிவாசன், நீர்வள பிரிவு முதன்மை தலைமை பொறியாளர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு மூலம் அரசு கட்டிடங்களை பராமரிப்பது, நீர்வள ஆதாரத் துறையின் கீழ் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்வள ஆதாரங்கள் அனைத்தையும் பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியில் அலுவலக உதவியாளர், பாசன உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், தூய்மை பணியாளர், டிரைவர், இரவு காவலர் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஆயிரத்து 458 பேர் வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசிடம் கோரிக்கை வைத்தனர்.  இதுதொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். இதைதொடர்ந்து விடுபட்டவர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதல்வர் உறுதி அளித்தார். இதையடுத்து பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த தினக்கூலி ஊழியர்கள் பட்டியல் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பட்டியலில் மேலும் கூடுதல் விவரங்கள் கேட்டு அரசு செயலாளர் மணிவாசன் கடிதம் எழுதியுள்ளார் இதுதொடர்பாக பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், நீர்வளப் பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பணிவரன்முறை செய்யப்பட உள்ளவர்கள் பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கின்றனரா என்பது தொடர்பாக அனைத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்.  கல்வி தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்படவுள்ள நிலையில் இதுதொடர்பான விவரங்களை அரசுக்கு உடனடியாக அனுப்பி வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது  இதுதொடர்பான நீர்வள பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அனைத்து மண்டல தலைமை பொறியாளர் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் 24 மணி நேரத்திற்குள் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த ஊழியர்கள் விவரங்கள் சரிதானா என ஆய்வு செய்து இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.



Tags : 1,458 daily wage employees, secretary of state, letter
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...