×

ஊரக தொழில்களை மேம்படுத்தவும், தொழில்களை தொடங்கவும் 300 கோடியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: ஊரக தொழில்களை மேம்படுத்வும், புதிதாக தொழில்களை தொடங்கவும் ரூ.300 கோடி கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: . தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி மதிப்பில் மொத்தம் 1,39,574 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம், 31,952 பேருக்கு மொத்தம் ரூ.159 கோடியே 76 லட்சம் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

* 1,598 உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 31,960 பேர் பயன்பெறும் வகையில் ஒரு முறை மூலதன மானியமாக குழு ஒன்றுக்கு (20 பேர்) 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.23 கோடியே 97 லட்சம் வழங்கப்படும்.
* குழு ஒன்றுக்கு 5 பயனாளிகள் அடங்கிய 240 தொழில் குழுக்களுக்கு (1200 பேர்) தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.3 கோடியே 60 லட்சம் ஒருமுறை மூலதன மானியமாக வழங்கப்படும்.
* புலம் பெயர்ந்து மீண்டும் திரும்பி வந்த 5,010 இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50 கோடியே 10 லட்சம் நீண்டகால கடனாக வழங்கப்படும்.
*  ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு 500 பேர் வீதம் 37,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 75 உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு தலா ரூ.10 லட்சம் என ரூ.7 கோடியே 50 லட்சம்  மூலதன மானியமாக வழங்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள், ஆதரவற்றோர் உள்ளிட்ட நலிவுற்றோரின் தொழில் மேம்பாட்டிற்காக 31,952 பேர்களை தேர்ந்தெடுத்து தொழில் மூலதன நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் மொத்தம் ரூ.49 கோடியே 92 லட்சம்  நீண்டகால கடனாக வழங்கப்படும்.  இத்திட்டத்தின் கீழ் முகக்கவசம் தயாரித்தல்,.ஆடைகள் தயாரிப்பு, பால்வள மேம்பாடு, ஆடு, மாடு, கோழி, பன்றி மற்றும் மீன் வளர்ப்பு, சிறு உணவகங்களை நடத்துதல், வேளாண் பொருட்கள் விற்பனை, சிறு மளிகை கடைகள் வைத்தல், அரவை மாவு தொழில், பல்வேறு உலோக பொருட்களை தயாரித்தல், செயற்கை ஆபரண தொழில், அழகுக்கலை, மரச்சிற்பங்கள் / மரவேலைகள், மின் பழுது நீக்கம், குழாய் பழுது நீக்கம், வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதுநீக்கம், கணினி சார்ந்த தொழில்கள், கைபேசி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் மேம்பாட்டிற்காக இந்த சிறப்பு நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு நிதியுதவி வழங்கினார்.

Tags : Businesses ,Corona Special Financing Package Scheme to Improve Rural Industries , Rural Industries, Industries, Corona, Financing Package Scheme, Chief Minister Edappadi
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...