×

மத்தியில் பாஜ பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: வெற்றி பாதி; சவால்கள் மீதி

புதுடெல்லி: மத்தியில் மோடி தலைமையிலான பாஜ அரசு 2வது முறையாக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.    கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ தனித்து 303 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிறகு, பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த அரசு பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.  இந்த ஓராண்டு ஆட்சியில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட சில  முக்கிய வாக்குறுதிகளை பாஜ நிறைவேற்றி இருக்கிறது.  குறிப்பாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் -370 ரத்து செய்தது. அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ராமர் கோயில் விவகாரமும் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்க்கப்பட்டு, கோயில் கட்டும்பணிக்கான ஏற்பாடு நடக்கிறது. இது தவிர, முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றம் என்ற சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 ஆனால், திடீரென முளைத்த கொரோனா வைரஸ் பிரச்னையால் பாஜ. அரசு தத்தளித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அதை சீர்படுத்துவது அரசுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. ஆட்சியின் முதல் பாதி வெற்றிகரமாகவும், மீதி பாதி கொரோனா பரவல், தேர்தல் தோல்விகள் என சறுக்கலாகவும் அமைந்துள்ளது. இதேபோல், பாஜ தலைவராக இருந்த அமித்ஷா, தேர்தலுக்கு பின் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அரசில் முக்கிய முடிவு எடுக்கும் மற்றும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். இவரது தலைமையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜே.பி.நட்டா கடந்த ஜனவரியில் பொறுப்பேற்றார்.

பல மாநில சட்டப்பேரவையில் வெற்றி பெற்ற மோடியின் வித்தை, மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எடுபடவில்லை. பாஜ கூட்டணியில் பாரம்பரியமாக இருந்து வந்த சிவசேனா, எதிர்கட்சியான காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. இது. மோடிக்கு சரிவாக அமைந்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சியில் இருந்த பாஜ, சட்டப்பேரவை தேர்தலில் பயங்கர தோல்விைய சந்தித்தது.  கொரோனா பிரச்னை, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அலைக்கழித்த விவகாரம், வேலையிழப்பு பிரச்னைகள்  போன்றவற்றால், விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டப்பேரவை தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்கு வங்கம், கேரளா, அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்கள் பாஜ.வுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என தெரிகிறது.

சாதனையை விளக்கி 5 மொழிகளில் கடிதம்
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது அரசின் முதலாம் ஆண்டு சாதனைகள் குறித்து, ஐந்து முக்கிய மொழிகளில் கடிதம் எழுதுவதாக பாஜ வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இந்த கடிதத்தின் கருத்துக்களை மக்களிடம் பாஜ தொண்டர்கள் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : BJP , BJP, one year, half of success, challenges
× RELATED அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல்...