×

இந்தியா - சீனா எல்லை பிரச்னையால் பிரதமர் மோடி ‘மூட் அவுட்’டில் இருக்கிறார்போனில் பேசியதாக டிரம்ப் சர்ச்சை கருத்து

* பேசவே இல்லை என மத்திய அரசு மறுப்பு

வாஷிங்டன்: ‘‘இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையால், பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனநிலையில் இல்லை,’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ‘மோடி- டிரம்ப் இடையே அப்படியொரு பேச்சுவார்த்தை நடக்கவே இல்லை,’ என்று மத்திய அரசு மறுத்துள்ளது.
இந்தியாவின் லடாக், சிக்கிம் எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறி படைகளை குவிப்பதைத் தொடர்ந்து, இந்தியாவும் தனது எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையை தீர்க்க, சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்  தெரிவித்தார்.

இதற்கு நேற்று முன்தினம் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், ‘இந்தியா- சீனா இடையிலான எல்லை பிரச்னைக்கு தூதரக அளவிலான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அமெரிக்காவின் சமரசம் தேவையில்லை,’ என்று கூறியது.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று பேட்டி அளித்தபோது டிரம்ப் கூறுகையில், ``இந்தியா - சீனா இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. தலா 140 கோடி மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளும் ராணுவ பலம் மிக்கவை. இந்தியா மகிழ்ச்சியாக இல்லை. அதே போல், சீனாவும் மகிழ்ச்சியாக இல்லை. இப்பிரச்னை பற்றி பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் நான் பேசினேன். சீனா உடனான எல்லை பிரச்னையால் அவர் நல்ல மனநிலையில் இல்லை,’’ என்றார்.

‘எல்லைப் பிரச்னையால் மோடி வேதனையில் இருக்கிறார்,’ என்பதையே டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டார். ஆனால், டிரம்ப்பின் இந்த கருத்துக்கு இந்தியா நேற்று உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. ‘சீனா உடனான எல்லை பிரச்னை பற்றி பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் இடையே சமீபத்தில் எந்த தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை. கடைசியாக அவர்கள் இருவரும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தொடர்பாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி மட்டுமே பேசினர். அதன் பிறகு பேசவே இல்லை,’ என்று தனது விளக்கத்தில் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குளோரோகுயின் சாப்பிட்ட பிறகு டிரம்ப் மிகவும் தெம்பு
‘ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து பயன்படுத்திய பின்பு அதிபர் டிரம்ப் எப்படி உணர்கிறார்?’ என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கெய்லே மெக்னானி நேற்று அளித்த பதிலில், ``அந்த மருந்தை உட்கொண்ட பிறகு டிரம்ப் முற்றிலும் நன்றாக உள்ளார். பரிபூரண உடல் நலத்துடன் இருக்கிறார். கொரோனா பாதிப்பு இருப்பதாக உணர்ந்தால் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை மீண்டும் உட்கொள்வதாக டிரம்ப் கூறியுள்ளார்.’’ என்றார்.

சமரசம் தேவையில்லை சீனாவும் திட்டவட்டம்
டிரம்பின் சமரச முயற்சிக்கு மறுப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், ‘‘இந்தியா - சீனா  இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே தகவல் தொடர்பில் உள்ளன. பேச்சுவார்த்தை, ஆலோசனையின் மூலம் பிரச்னைக்கு சரியாக தீர்வு காணப்படும். இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னையில் மூன்றாம் நாடு தலையிட தேவையில்லை’’ என்றார்.

அமெரிக்காவை விட இந்தியாவில் நான் ரொம்ப பிரபலம்
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் கூறுகையில், ``உங்கள் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். அவர் மிக சிறந்த மனிதர். மிகச் சிறந்த செயல்களை செய்து வருகிறார். இந்தியாவில் நான் பிரபலமாக இருக்கிறேன் என்பது தெரியும். இந்தியர்கள் என்னை விரும்புகின்றனர். இந்நாட்டு ஊடகங்கள் என்னை விரும்புவதை விட, இந்தியாவில் என்னை விரும்புகிறார்கள் என்பதை உறுதியாக கூற முடியும்,’’ என்றார்.

Tags : Modi ,Trump ,China ,border dispute ,India , India, China, PM Modi, Trump Send feedback History Saved
× RELATED சபரிமலை சென்று சர்ச்சையை...