காதல் போயின் சாதல் காதல்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

 மனித வாழ்வில் காதல் ஆற்றும் பங்கு மிகப் பெரியது என்பதை நாம் அனைவருமே ஒப்புக் கொள்வோம். அந்தக் காதலில் அறிவியல், அதாவது வேதியியல் ஆற்றும் பங்கு குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை ‘கெமிஸ்ட்ரி' என்று சொல்வது இன்றைய நாகரிக சொல்லாடலாக உள்ளது. உண்மையிலேயே அதற்கு ‘கெமிஸ்ட்ரி' அல்லது வேதியியல்தான் காரணம் என்பதை அறிந்தோ அறியாமலோ தற்கால இளைஞர்கள் இந்தச் சொல்லாடலை வேகமாக பரப்பி வருகின்றனர்.

கண்டவுடன் காதல் என்பதில் தொடங்கி, இணையர் இல்லையேல் வாழவே இயலாத நிலை வரை அனைத்திற்கும் அறிவியல் விளக்கங்கள் உள்ளன. காதல் என்ற அந்த உணர்வு இந்த உலகில் அதீதமாக கொண்டாடப்படும் ஓர் உணர்வாக உள்ளது. அந்த உணர்வை வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவிக்காமல் மனித வாழ்வு முழுமையடையாது என்ற அளவில் அந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நூற்றாண்டுகளாக கவிதைகளும் காப்பியங்களும் பாடல்களும் கதைகளும் நாடகங்களும் திரைப்படங்களும் இன்னும் அத்தனை கலை வடிவங்களும் படைக்கப்பட்டுள்ளன.

இன்றும் படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு இணையாக பேசப்படும் உணர்வு ஒன்று உண்டென்றால் அது தாய்மை எனும் உணர்வுதான். தாய்மை என்ற உணர்வுடன் எவ்வாறு புனிதத் தன்மை இணைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே காதல் என்ற உணர்வுடனும் புனிதத் தன்மை இணைக்கப்பட்டுள்ளது. அதே போன்று இரு உணர்வுக்கும் பொதுவான மற்றொன்று ‘பரவசம்'. பெற்ற தாய்க்கு தன் குழந்தையின் முதல் தொடுதல் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரம் காதலின் முதல் பார்வை, முதல் தீண்டல் ஆகியவையும் மிகுந்த பரவசம் மிகுந்ததாக சொல்லப்படுகிறது.

அது எப்படி இந்த இரு நிலைகளிலும் ஒரே மாதிரியான பரவசத்தை ஒருவர் உணர முடியும்? இவை இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறா? இந்தக் கேள்விக்கான பதில்தான் டோபாமின் (Dopamine). நம் உடலில் பல சுரப்பிகள் சுரக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதில் குறிப்பாக டோபாமின் (Dopamine), பெரோமோன்ஸ் (Pheromones), ஆக்சிடோசின் (Oxytocin), டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) ஆகிய சுரப்பிகளும், பாரிய இழையம் ஒப்புமை தன்மை (Major Histocompatibility complex MHC) என்று வழங்கப்படும் நம் உடலின் இரத்த அணுக்கள் மீது படிந்துள்ள ஒரு வித மரபணு புரத பூச்சும் காதல் என நாம் அழைக்கும் உணர்வினை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன.

டோபாமின் என்பது நம் உடலில் சுரக்கும் ஒரு சுரப்பி. கிளர்ச்சியூட்டக்கூடிய புதுமையான அனுபவங்கள் நமக்கு ஏற்படும் போதெல்லாம் நம் உடலில் இந்த சுரப்பி சுரக்கிறது. அதுவே பரவசம் என்று நாம் உணரக்கூடிய உணர்வை நமக்குத் தருகிறது. சிறு குழந்தையாக இருக்கும் போதே இந்தச் சுரப்பி சுரக்கத் தொடங்கி விடுகிறது. ஒரு குழந்தையின் வாழ்வில் தினமும் புதுப்புது அனுபவங்களே.

அதனால்தான் குழந்தைகள் சின்னச் சின்ன நிகழ்விலும் குதூகலமும் பரவசமும் அடைகின்றனர். நாம் வளர வளர புதுமையான அனுபவங்கள் குறைகின்றன. அதனால் அந்த சுரப்பியும் அதிகமாக சுரப்பதில்லை. ஆனால் அந்த சுரப்பி தரும் பரவச அனுபவத்திற்கு பழகிய மனித மனமும் உடலும் அத்தகைய அனுபவத்திற்கு ஏங்குகின்றன. அதனால்தான் த்ரில்லான திகிலான அனுபவங்களை மனம் நாடுகிறது. குழந்தைகள் வளர வளர புதிது புதிதாக சேட்டைகள் செய்யத் தொடங்குவது இந்த அனுபவத்திற்காகதான்.

அதனால்தான் கைப்பேசிகளிலும் கணினிகளிலும் குழந்தைகளுக்கான விளையாட்டுகளை உருவாக்குபவர்கள் டோபாமின் சுரப்பியை குறிவைத்தே இந்த விளையாட்டுகளை வடிவமைக்கிறார்கள். என்னவெல்லாம் செய்தால் டோபாமின் சுரக்கும் என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்படுகின்றன. நம் குழந்தைகளும் அடுத்தக் கட்டம் அடுத்தக் கட்டம் என்று அந்த விளையாட்டுகளை விளையாடுவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

அது மட்டுமல்ல. போதை பொருட்கள் உட்கொள்ளும் போதும் இந்தச் சுரப்பியே சுரக்கிறது. அதனால்தான் சிறிய அளவில் மதுவோ, புகையோ, பிற போதை பொருட்களையோ உட்கொள்ளத் தொடங்கும் பெரும்பாலானோர் தாங்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிக்கின்றனரே அன்றி அவர்களால் அதை குறைக்க முடிவதில்லை. நம்புங்கள். இதே டோபாமின் சுரப்பிதான் வளர் இளம் பருவத்தில் (Teenage) எதிர் பாலினத்தவரைக் காணும் போதும் சுரக்கிறது.

இந்த டோபாமின்னுடன் கூடுதலாக பாலியல் உணர்வும் தூண்டும் சுரப்பிகளான ஈஸ்ட்ரோஜின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவை சுரப்பதும் பருவமடையும் வயதில் அதிகரிக்கிறது. இவற்றின் காரணமாகவே எதிர் பாலின ஈர்ப்புத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக எதிர் பாலினத்தவருடன் இயல்பாக பழகும் வாய்ப்பற்றச் சூழலில் வளரும் ஆண், பெண் குழந்தைகளுக்கு பருவமடையும் வயதில் எதிர் பாலினத்தவரைக் கண்டாலே இந்த சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கி விடுகின்றன. இன்னார் என்றில்லாமல் எவரைக் கண்டாலும் இந்த நிலை ஏற்படுகிறது.

அதனால்தான் அத்தகைய ஆண் குழந்தைகள், ஆம்.. அவர்கள் இன்னமும் குழந்தைகள்தாம்... எதிர் பாலினத்தவர் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி வாசல்களில் நின்று அவர்களை பார்ப்பதன் மூலமாகவே பரவசமடைகிறார்கள். தப்பித் தவறி ஒருவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தால் அந்தப் புது அனுபவத்தால் டோபாமின் சுரந்து ஏற்படுத்தும் பரவசத்தை காதல் என்று நம்பியும் விடுகிறார்கள். இந்த நபருடனான பழக்கம் வழக்கமாகியப் பிறகு டோபாமின் சுரப்பதும் குறைந்து விடுகிறது. உறவில் குழப்பமும் வந்து விடுகிறது.

இதைப் போன்றே எதிர் பாலின ஈர்ப்பில் பங்காற்றும் மற்றொரு சுரப்பி பெரோமோன்கள் (Pheromones) ஆகும். கண்டதும் காதல் என்பது உண்மையோ இல்லையோ நுகர்ந்ததும் காதல் வருவதற்கு காரணமாக இருப்பவை இந்த பெரோமோன்களே. பெரோமோன்கள் என்பது நம் உடலில் இயற்கையாக வெளிப்படும் வாசம். மிருகங்கள் எவ்வாறு வாசத்தின் மூலம் தனது இணையையும் எதிரியையும் அடையாளம் காண்கின்றனவோ அவ்வாறே மனிதராலும் இனம் காண முடியும். நாம் நம் சக மனிதர்களிடம் உணர்வதெல்லாம் அவர்கள் பயன்படுத்தும் வாசனைப் பொருட்களின் வாசத்தையே.

ஆனால் அதைக் கடந்து மனிதர்களின் இயற்கையான வாசத்தை நுகரும் திறன் மனித உடலுக்கு உள்ளது. குழந்தைகள் அம்மாவின் சேலையில் பாதுகாப்பை உணர்வதும் காதலியின் கைக்குட்டையும் காதலனின் சட்டையும் காதலில் முக்கியத்துவம் பெறுவதும் இதனால்தான். அதே போன்று எதிரிகளை அடையாளம் காண்பதற்கு நம் உடலில் இரத்த அணுக்கள் மீது படிந்துள்ள ஒரு வித புரதப் பூச்சே காரணம். இதற்கு பாரிய இழையம் ஒப்புமை தன்மை (எம். எச். சி  Major Histocompatibility complex  MHC) காரணம். உடல் உறுப்புகள் மாற்று சிகிச்சைகளின் போது, ரத்தப் பிரிவின் பொருத்தத்துடன் இவற்றின் பொருத்தபாடே பார்க்கப்படுகின்றன.

பெரோமோன்கள் மற்றும் எம். எச். சி இவையே ஒருவரைப் பார்த்ததும் உங்களுக்கு கிளர்ச்சியும் ஈர்ப்பும் ஏற்படுவதற்கும் உங்கள் நண்பருக்கு அவரைக் கண்டாலே வெறுப்பு ஏற்படுவதற்கும் காரணமாகும். இந்த எம். எச். சி. எனப்படுபவை வியர்வை, உடல் நாற்றம், எச்சில் போன்றவற்றின் மூலம் வெளிப்படுகிறது. இந்த எம். எச். சி. பல வகைப்படுகிறது. ரத்த உறவினர்களிடையே அது ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளது.

பிறரின் எம். எச். சி அளவை அவர் களிடமிருந்து வெளிப்படும் மிக மெல்லிய இயற்கையான வாடை மூலமாக நமது உடல் அறிகிறது. இந்த வாடையை நாம் பட்டவர்த்தனமாக உணராத போதும் அதனை உணரும் திறனை நம் உடல் கொண்டுள்ளது. ஆனால் இதை மறைத்து அனைவரையும் ஈர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு வாசத்தை தங்கள் பொருள் தருவதாக வாசனைத் திரவிய விளம்பரங்கள் பறைசாற்றுகின்றன. அது எத்தனை பொய்யானது என்பதை இந்த அறிவியல் உண்மை வெளிக்காட்டுகிறது.

இந்த எம்.எச்.சி குறித்து மிக முக்கியமாக நாம் அறிய வேண்டிய செய்தி என்னவெனில், இரு நபர்களுக்கிடையே எம். எச். சி அளவு எவ்வளவுக்கெவ்வளவு வேறுபடுகிறதோ அந்த அளவு ஈர்ப்பு இருக்கும் என்பதையும்தான். ஆக, உறவினர்களிடையே எம். எச். சி அளவு ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளது என்ற நிலையில், இயற்கையான ஈர்ப்பு என்பது உறவுகளிடம், அதாவது அத்தை பிள்ளைகள், மாமன் பிள்ளைகள், தாய் மாமன் போன்றோரிடம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

அதே போன்று, இந்த எம். எச். சி. என்பது மரபணு பூச்சு என்ற அடிப்படையில், ஒரே சாதிக்குள் காலம் காலமாக மண உறவு கொண்டு ஒரே மரபணுக் குட்டைக்குள் ஊறிக் கிடப்பதால் ஒரே சாதியை சேர்ந்தவர்களிடமும் எம். எச். சி அளவு பெரிதாக வேறுபட வாய்ப்பில்லை. எனவே ஒரே சாதிக்குள்ளும் இயற்கையான ஈர்ப்பு ஏற்படும் வாய்ப்புக் குறைவு. அப்படி நெருங்கிய உறவுகளிடமோ அல்லது சாதிக்குள்ளோ ஏற்படும் ஈர்ப்பு என்பது காலம் காலமாக நம் மூளையில் திணிக்கப்பட்ட செயற்கையான காரணங்களால் ஏற்படும் ஈர்ப்பே அன்றி இயற்கையானது அல்ல.

மேலும், நமது வருங்கால துணையின் தோற்றம் குறித்து நமக்கு பல்வேறு கற்பனைகள் இருந்த போதும், அதற்கு சிறிதும் தொடர்பற்ற ஒருவர் மீது நமக்கு ஈர்ப்பு ஏற்படுவதற்கு இந்த எம். எச். சி அளவும் ஒரு காரணமாகிறது. ஆக, உண்மையில் காதல் என்பது ஓர் அறிவியல் நிகழ்வு மட்டுமே. அதிலும் வேதியியல் நிகழ்வு மட்டுமே. பசி என்பதும் தாகம் என்பதும் எவ்வாறு சுரப்பிகளால் ஏற்படும் இயல்பான அறிவியல் நிகழ்வோ அதை போன்றதே காதலும் ஓர் இயல்பான அறிவியல் நிகழ்வு மட்டுமே. அதை கடந்து அதில் சிறப்பாக கொண்டாட எதுவும் இல்லை என்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

நம் கதைகளும் திரைப்படங்களும் காலம் காலமாக சொல்வது போல் காதல் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் ஒரு முறைதான் தோன்றும் என்ற பிரமையை இந்த அறிவியல் உண்மைகள் போட்டு உடைக்கின்றன. காதலுக்கு அடிப்படையாக இருப்பது பாலியல் ஈர்ப்பு என்பதும் அந்த பாலியல் ஈர்ப்பு என்பது பசி, தாகம் போன்று அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஓர் இயற்கை உணர்வு என்பதையும் இந்த அறிவியல் உண்மைகள் உரத்துச் சொல்கின்றன.

அந்த பாலியல் ஈர்ப்பைக் கடந்து அந்த உறவு நிலைப்பதும் நீடிப்பதும் அறிவு சார்ந்த செயல்பாடு. புரிதல், விட்டுக் கொடுத்தல், அரவணைத்தல் ஆகியவற்றோடு மிக முக்கியமாக ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மதிப்பு மற்றும் நம்பிக்கை போன்று நட்புக்கு அடித்தளமாக இருப்பவைதான் எந்த விதமான உறவாக இருந்தாலும் அந்த உறவின் உறுதிக்கும் அடிப்படையாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை. இவை இல்லாத போது அந்த உறவில் விரிசல் வருவதும் வேறு ஓர் உறவில் பிணைப்பு ஏற்படுவதும் மிகவும் இயற்கையான நிகழ்வுகளே. இது பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் பொருந்தும்.

முக்கியமாக, ‘பெண்கள் ஒரு முறை ஒருவரை மனதால் நினைத்து விட்டால் அவ்வளவுதான். வேறு யாரையும் அவர்களால் மனதால் கூட ஏற்க முடியாது’ என்ற வசனம் நம் திரைப்படங்களில் இன்று வரை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இது எவ்வளவு பெரிய பொய்! இந்தப் பொய்யின் விளைவாக பல பெண்கள் தங்களுக்கு இயற்கையான உணர்வினால் ஏற்படும் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்கள் குறித்து தாங்களே குற்ற உணர்வு கொள்ளும் நிலை அல்லவா ஏற்பட்டுள்ளது! ஒவ்வொரு காதலும் உண்மையானதுதான்.

அந்த நொடி அதுதான் முக்கியமானது. ஆனால் அது வாழ் நாள் எல்லாம் நீடிப்பது என்பது பல கூறுகளைக் கொண்டது. அதை விடுத்து, ஒரு முறை காதல் கொண்ட காரணத்தினாலேயே அந்த உறவில் பிணைத்துக் கிடப்பது என்பது நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் சிறை ஆகாதா? ‘அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண், பெண் சம்மந்தத்தில் இல்லை.

ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண்,பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்' என்கிறார் தந்தை பெரியார் (குடி அரசு - தலையங்கம் - 18.01.1931). காதல் மிக இயல்பானது. அதை விட இயல்பானது காதலில் ஏற்படும் பிளவு. அவற்றை விடவும் மிக இயல்பானது மீண்டும் மீண்டும் முகிழ்க்கும் காதல்.

- பூங்குழலி

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Related Stories: