×

கொரோனா பொது முடக்க காலத்தில் ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சி செய்கிறது : டி.ஆர்.பாலு எம்பி பேட்டி

காஞ்சிபுரம்: திமுக தலைமை அலுவலகத்துக்கு பொதுமக்கள் அனுப்பிய கோரிக்கை மனுக்களை,   பெரும்புதூர் எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையாவிடம், வழங்கினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவீரமடைகிறது. இந்த நேரத்தில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உட்பட நிர்வாகிகள் இரவு, பகலாக உழைத்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில்552 கோரிக்கை மனுக்கள், நிவாரணம் கோரி திமுக தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளன. இந்த மனுக்களை கலெக்டரிடம் அளித்துள்ளோம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இப்போது தான் பரிசீலனையே தொடங்குகிறது. இதிலிருந்து அரசு நத்தை வேகத்தில் செயல்படுகிறது என்பதை உணர முடிகிறது.  திமுக தலைமை அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் நிவாரணம் கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். இதற்காக 150 பேர் பணியாற்றி, சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல்களை தெரிவித்து உடனுக்குடன் நிவாரண உதவிகளை செய்கிறோம். உலகில் எந்த அரசியல் கட்சி தலைவரும் செய்யாத வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிவாரண உதவிகளை வழங்குகிறார். அதே நேரத்தில் தமிழக அரசு செயல்படவே இல்லை.

ஆளுங்கட்சி செய்ய வேண்டியதை எதிர்க்கட்சி செய்கிறது. தமிழக அரசு தரும் நிவாரண தொகை 1000, ஒரு மாதத்துக்கு குழந்தைக்கு பால் வாங்கக்கூட முடியாது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பொய்யான தகவல்களை கூறி கொண்டிருக்கிறார். மாலா என்ற பெண் தனக்கு எந்த உதவியும் திமுக செய்யவில்லை என கூறியதாக, சொல்கிறார். ஆனால் அவருக்கு நாங்கள் நிவாரணப் பொருட்களை வழங்கியதற்கான ஆதாரம் உள்ளது.

சிறந்த தலைவரின் பெயரை வைத்துள்ள அமைச்சர் காமராஜ், அவரது பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அவரது கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. கொசுவை சுடுவதற்கு துப்பாக்கி தேவையில்லை என்றார். அப்போது, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, ஆர்.டி.அரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Baloo ,party ,shutdown ,Corona ,interview ,TR Ballu MP ,government , Corona, the ruling party, TR Baalu MP
× RELATED எதிர்காலத்தில் விவசாயம் காட்சிப்...