×

நாளுக்கு நாள் படுவேகமாக பரவி வரும் கொரோனா:சென்னையில் ஒரே நாளில் 22 பேர் பலி: தலைநகரில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

* தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
*  சென்னையில் நேற்றுடன் 13,362 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
*  கொரோனா படுவேகமாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில் மட்டும் பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று மட்டும் 22 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் மரணங்கள் தினமும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசும், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். சென்னையில் தினசரி 500 பேருக்கு மேல் ெகாரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் 13,362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்   ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய 4  மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக, உரிய சிகிச்சை கிடைக்காமல் தினசரி 10க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் உயிரிழந்து வருகின்றனர். இதில் புதிய  உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர்  உயிரிழந்துள்ளது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நுண்ணறிவு பிரிவு காவலருக்கும், அவரது மனைவி, 2 குழந்தைகள், பெற்றோர், உறவினர் என மொத்தம் ஒரே குடும்பத்தில் 7 பேருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காவலர் அனுமதிக்கப்பட்டார். இதில் 63 வயதான அவருடைய தாயார் நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோன்று கே.கே.நகரை சேர்ந்த 38 வயது ஆண், புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தை சேர்ந்த 88 வயது முதியவர், திருவொற்றியூரை சேர்ந்த 51 வயது ஆண், செங்குன்றத்தை சேர்ந்த 50 வயது ஆண், மயிலாப்பூரை சேர்ந்த 58 வயது பெண், முத்தியால்பேட்டையை சேர்ந்த 56 வயது ஆண் என ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 78 வயது முதியவர், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 59 வயது ஆண், அமைந்தகரையை சேர்ந்த 53 வயது ஆண் மற்றும் எழும்பூர் பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் என 4 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தனர். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 70 வயது ஆண், 66 வயது பெண், 77 வயது ஆண், 32 வயது ஆண் உள்ளிட்ட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். சென்னை கோட்டூர்புரம், ஐஐடியில் பணியாற்றும் ஊழியருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

இதையடுத்து, அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 550 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும்  11,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது.

அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கும், அரியலூர் 3, கள்ளக்குறிச்சியில் 19, திருவண்ணாமலையில் 48, தூத்துக்குடியில் ஒருவர், நெல்லையில் 15, விருதுநகரில் ஒருவர், ரயில்வே தனிமை முகாமில் இருந்த 72 பேர், விமான நிலைய தனிமை முகாமில் இருந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 135 பேர், கேரளாவில் இருந்து வந்த 3 பேர், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் உள்ளிட்ட 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 518 ஆண்கள், 356 பெண்கள் ஆவர்.  

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 765 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்படி தமிழகத்தில் இதுவரை 11,313 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai , Corona, Chennai, Tamil Nadu, dies
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...