திமுக சார்பில் வரும் 31-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: கொரோனா தடுப்பு பணியில் அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தீவிரமாகி வருகிறது. இருப்பினும் அரசு வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் 19,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே 14 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 145 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது.

எதையும் மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று திமுக தலைவர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கை என்ற பெயரால், அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? அதன்பிறகும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றால், இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை என்று அர்த்தம் என கூறி நேற்று அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படும் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்காக திமுக தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக;  திமுக சார்பில் வரும் 31-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீட் இடஒதுக்கீடு தொடர்பாகவும், கொரோனா தடுப்பு பணியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: