சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54.46 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு...!

சென்னை: உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மரவள்ளி மாவுப்பூச்சி. இப்பூச்சிகள் மரவள்ளியை மட்டும் அல்லாது பப்பாளி, மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி, செம்பருத்தி, செவ்வந்தி, போன்ற பயிர்களையும், களைச்செடிகளையும் தாக்குகிறது எதிர்காலத்தில் மக்காச்சோளம் போன்ற பிற பயிர்களையும் தாக்கக்கூடும். மரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, மாவுப் பூச்சி மற்றும் செஞ்சிலந்திகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.

இந்தப் பூச்சிகள், இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் இலையின் நிறம் மஞ்சள் நிறமாக மாறுவதோடு இலைகளில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையும் பாதிக்கப்படுகிறது. இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்படுகிறது. மாவுப் பூச்சியானது வெள்ளை ஈ போல் ஒரு இடம் விட்டு ஒரு இடம் நகராமல் இலையின் கீழ்ப்பரப்பில் அடைபோல் வெண்மை நிற படலமாக ஒட்டிக்கொண்டு இலையின் சாற்றினை உறிஞ்சும். மரவள்ளி செடியில் பொதுவாக ஐந்தாவது இலைகளிலிருந்து மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படும். இவற்றை முறையான உயிர்ரக மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மரவள்ளிப் பயிரில் மாவுப் பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54.46 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹெக்டேருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டேருக்கு நிதியை ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் நிதி அறிவிப்பால், மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: