×

ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா கடும் மோதல்

நியூயார்க்: ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.  ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறித்து, அந்நாட்டை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இவற்றை சீனா ஒடுக்கியது.  அதோடு, தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா தனது நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றியும் உள்ளது. இது ஹாங்காங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடும் சட்டமாக இருக்கும் என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

மேலும், கொரோனா பாதிப்புக்கு இடையே சீனா அவசர அவசரமாக இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றிருப்பதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்து வருகிறது. ஹாங்காங் விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.  அதே சமயம், சீனா இது தனது உள்நாட்டு விவகாரம் என்று கூறி உள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுவது உள்நாட்டின் விவகாரம் என்பதால் இதை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என சீன கூறியுள்ளது.

மக்களின் பயம் என்ன?
70 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997ம் ஆண்டு ஹாங்காங்கை, இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது, “ஒரு தேசம், இரண்டு அமைப்பு” என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. ஆனால் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து மக்களின் சுதந்திரத்தை ஒடுக்க முயற்சிக்கிறது சீனா. இதுதான் ஹாங்காங் மக்கள் கொதித்தெழ காரணமாக உள்ளது.

பொருளாதார தடைக்கு ஒப்புதல்
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர், கஜகஸ்தான் பிரிவுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையான 2 கோடியில், இவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக உள்ளது. ஆனால், சீனாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த உய்குர் முஸ்லிம்கள் மீதான இன ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சீனாவின் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக அமெரிக்கா பலமுறை குரல் கொடுத்து வருகிறது. மேலும்,  இந்நிலையில், உய்குர் முஸ்லிம்களை கண்காணிப்பது,  காவலில் வைப்பதில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.


Tags : China ,clash ,US ,Hong Kong ,conflict , Hong Kong affair, USA, China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்