கோயம்பேடு மார்க்கெட்டின் நிலை என்ன?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு சந்தையினால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. சந்தைக்கு தொடர்புடைய அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும், அவர்களை தனிமைப்படுத்த வேண்டும், திருமழிசையில் அமைக்கப்படும் தற்காலிக சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும் என்று கெருகம்பாக்கம் சுற்று வட்டார வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  நீதிபதிகள் வினித்கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜான் கிங்ஸ்லி ஆஜரானார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது,    கோயம்பேடு மார்கெட் நிர்வாக குழு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோயம்பேடு மார்கெட்டில் எடுக்கப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், திருமழிசையில் தற்காலிகமாக 207 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி உள்ளது. சரக்கு கொண்டு வரும் வாகனங்கள் தடையில்லாமல் செல்ல மார்க்கெட்டில் அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை செய்யப்படுகிறது. ஊழியர்கள், வியாபாரிகளுக்கு மாஸ்க் வழங்கப்படுகிறது. கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறு வியாபாரிகளுக்கு அனுமதியில்லை. சாலையோரங்களில் வியாபாரம் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், திருமழிசை மார்க்கெட்டில் வீணாவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை, கோயம்பேடு மார்கெட்டின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து போட்டோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: