எம்பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் 2வது தவணையை வழங்க உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு தயாநிதி மாறன் எம்பி கடிதம்

சென்னை: நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 2019-20ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் இரண்டாவது தவணையை வழங்கிட உத்தரவிடுமாறு பிரதமருக்கு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நேற்று கடிதம் அனுப்பினார்.  அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி மத்திய புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020-21 மற்றும் 2021-22 ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை நிறுத்தியுள்ளதாக சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மற்றும் ஏப்ரல் 8ம் தேதிகளில் மீண்டும் ஓர் சுற்றறிக்கை அனுப்பி 2019-20 நிதியாண்டிற்கான இரண்டாவது தவணையும் நிறுத்தி வைக்க கோரியுள்ளனர். இது சம்பந்தமாக கடந்த 6ம் தேதி அத் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கிற்கு  கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில், ‘கொரோனா நோய் தொற்றின் பாதிப்பினால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நிதியாண்டு 2020-21, 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளோடு 2019ம் ஆண்டிற்கான இரண்டாவது தவணை நிதியினையும் வேறு வழியின்றி திரும்ப பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய திட்டங்களை இடை நிறுத்துவது என்பது தொகுதி மக்களுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே உங்களுக்கு இந்த பிரச்னை குறித்து கடிதம் எழுதியுள்ளார். இது கூட்டாட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, கொரோனா தொற்று நோய்களின் போது தொகுதியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு எதிர்மறையானது என்றும் சுட்டிக்காட்டினார். இரண்டாவது தவணை நிறுத்தப்படுவது எனது தொகுதியின் குடிமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.தொகுதிகளுக்குள் மருத்துவ உட்கட்டமைப்பை வலுப்படுத்த மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பகுதியை வழங்க உறுதி அளித்துள்ளனர்.

எனது தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் அடிமட்ட உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளன.  அங்கன்வாடி கட்டமைத்தல், பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்கள், நவீன கழிப்பறை வசதிகள், பல்நோக்கு அரங்குகள் இவை அனைத்தும் அடித்தட்டு மக்களுக்கு வரும் ஆண்டுகளில் நாம் கொரோனா அபாயமுடன் வாழ பழகும் போது மிகவும் உதவக்கூடியவை. இதனை மனதில் கொண்டு, இரண்டாம் தவணைக்கான நிதியினை வழங்கிட மறுபரிசீலனை செய்யுமாறு உங்களை வேண்டுகிறேன். குடிமக்களின் உரிமைகளுக்கும், தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்காமல் சிக்கன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: