தூத்துக்குடி தம்பதிக்கு 1.35 லட்சத்துக்கு விற்ற சிறுமி மீட்பு: தந்தை, நண்பர் உள்பட 4 பேர் கைது

கீழ்வேளுர்: நாகை மாவட்டம், நாகூர் கோசா மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் அஸ்ரப்அலி(40). மீன் வியாபாரி. இவரது மனைவி நிர்மலாபேகம் (28). இவர்களுக்கு மும்தாஜ்பேகம் (3), ராஜா உசேன் (1) என 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக நிர்மலாபேகம் பிரிந்து சென்றார். இதையடுத்து அஸ்ரப்அலி, தனது நண்பர் அசன்முகமதுவிடம் மகளை பள்ளியில் சேர்த்து விடும்படி கூறி உள்ளார். அவர் மதுரையில் தனக்கு தெரிந்த உறவினர் மூலம் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 19ம் தேதி சிறுமியை அழைத்துச் சென்றார். மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து குழந்தை எங்குள்ளது, பார்க்க வேண்டும் என்று அஸ்ரப்அலி கேட்டுள்ளார். அதற்கு குழந்தை உறவினர் வீட்டில் நலமாக இருப்பதாக அசன்முகமது கூறி சமாளித்துள்ளார். தொடர்ந்து அவ்வாறே கூறியதால் சந்தேகமடைந்த அவர் மதுரை வந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

கலெக்டர் உத்தரவின்பேரில், மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதன்பின், கோவில்பட்டி சென்று லாயல் மில் காலனி அப்துல்ரசாக்-ரசபுநிஷா தம்பதியிடம், சிறுமியை மீட்டு நாகை குழந்தைகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் போலீசார் நடத்திய விசாரணையில், கோவில்பட்டியை சேர்ந்த அப்துல்ரசாக் தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதும், நாகூரிலுள்ள ரசபுநிஷாவின் சகோதரி மூலம் அசன்முகமது விடம் சிறுமி மும்தாஜை 1.35 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து நாகூரை சேர்ந்த அசன்முகமது (40), நாகை கடசல்கார தெருவை சேர்ந்த கமர்நிஷா (53), சிக்கல்மெயின் ரோட்டை சேர்ந்த பாத்திமா (45) ஆகியோரை கைது செய்த போலீசார், சந்தேகத்தின்பேரில் தந்தை அஸ்ரப்அலியையும் கைது செய்தனர். மேலும் கோவில்பட்டி தம்பதி அப்துல்ரசாக்-ரசபுநிஷாவை தேடி வருகின்றனர்.

Related Stories: