×

17ம் நூற்றாண்டிலேயே நடந்த ‘படையெடுப்பு’ மதுரையை சூறையாடிய வெட்டுக்கிளிகள் வரலாறு: அலட்சியம் கூடாது என அரசுக்கு எச்சரிக்கை

மதுரை:  மதுரை மக்களவைத் தொகுதி எம்பி சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலில், ‘‘17ம் நூற்றாண்டு காலத்தில் மதுரைக்கு வடக்கிலிருந்து வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்தன. மேகக்கூட்டங்கள் போல வந்து அப்படியே செடி, கொடிகள், பயிர்களின் மீது மொய்த்தன. நிலமெங்கும் பெருமழை அடிப்பதுபோல நெறுநெறுவென்று சத்தம். பயிர்களை விட்டு அவை எழுந்து பறந்தவுடன் இலைகளற்ற வெறுந்தண்டுகளே எஞ்சின. இரண்டு நாட்களுக்கு படை படையாகத் தெற்கு நோக்கிச் சென்றன. நாடே பசுமையற்று மொட்டையாகப் போய்விட்டது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், ‘‘இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. மக்கள் சாணாக்கிழங்குகளைத் தேடிக் காடெல்லாம் அலைந்தனர். தாதனூரில் பாதிப் பிள்ளைகள் வயிற்றுப் போக்கில் மடிந்தனர்.

பேதி பரவத் தொடங்கியது. உயிரைத் தக்கவைத்தவர்கள் இறந்தவர்களைத் தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்குப் போனார்கள். எல்லா ஊர்களிலும் நாளெல்லாம் சனங்கள் சுடுகாட்டில் கும்பல் கும்பலாக நின்றிருந்தனர். புதைக்க இடமில்லாமல் ஆனது. தீ எரிந்துகொண்டே இருந்தது. மூன்றாண்டுகள் கழித்து நிலைமை இயல்புக்கு மீண்டபோது மூன்றிலொரு பங்கு மக்கள் சுடுகாட்டிலும் மீதிப்பேர் உயிரைப் பிடித்துக்கொண்டு ஊர்களிலும் இருந்தனர்...’’ என வெட்டுக்கிளிகளால் மதுரையில் விளைந்த விபரீதத்தை இந்த நாவல் வரிகள் விவரிக்கின்றது.

இதுபற்றி மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு மதுரையில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைப்பற்றி ‘மிஷனரிகள்’ எனப்படும் கிறிஸ்தவ இறைப்பணியாளர்கள் தங்களது குறிப்புகளில் பதிவிட்டுள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டு 1852ல் ‘மெஜூரா கன்ட்ரி மேனுவல்’லில் நெல்சன் என்ற வரலாற்றாளரும் பதிவு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, 1910ல் ‘மதுரை கெஜட்டியரி’ல் இதுகுறித்து பிரான்சிஸ் எழுதியுள்ளார். இதுபோன்ற ஆதாரங்களைக் கொண்டே ‘காவல் கோட்டம்’ நாவலில் இந்த நிகழ்வை எழுதி இருந்தேன்.

தமிழகத்திற்குள் ஒருபோதும் வெட்டுக்கிளிகள் வருகை இல்லையென அரசு கூற முடியாது. வராது என்றும் கூறக்கூடாது. தற்போதைய வெட்டுக்கிளிகள் அச்சுறுத்தல் தொடர்பாக அரசு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும்’’ என்றார்.


Tags : Madurai , 17th Century, Madurai, Locusts, Government of Tamil Nadu
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...