×

தொடர்ந்து 7 நாளாக தினமும் 6,000 பாதிப்பு: மக்களை அச்சுறுத்தும் கொரோனா

புதுடெல்லி: நாட்டில் தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு 65 நாட்கள் முடிந்த நிலையில், வைரசால் பாதிக்கப்பட்டு 86,110 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதே நேரம் 67,691 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதனால், குணமடைந்து வருபவர்களின் சதவீதம் 42.75 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 22ம் தேதி 6,510 பேரும், 23ம் தேதி 6,654 பேரும், 24ம் தேதி 6,767 பேரும், 25ம் தேதி 6,977 பேரும் 26ம் தேதி 6,535 பேரும் 27ம் தேதி 6,387 பேர் என 6 நாட்களாக பாதித்தோர் எண்ணிக்கை 6,000ஐ கடந்த நிலையில், நேற்று தொடர்ந்து 7வது நாளாக 6,000ஐ கடந்து 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: நாட்டில் கொரோனா தாக்கத்தினால் நேற்று ஒரே நாளில் 194 பேர் இறந்துள்ளனர். இதுவரை அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,897 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 938, மத்தியப் பிரதேசத்தில் 313, தமிழ்நாட்டில் 133 பேர் உள்பட நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 4,531 ஆக இருந்தது. இதே போல், பாதித்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிராவில் இதுவரை 56,948 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 18,545, டெல்லியில் 15,257 பேரும், குஜராத்தில் 15,195 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 6,566 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தம் பாதிப்பு 1,58,33 ஆகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

13 மாநகராட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு, நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், சென்னை உட்பட நாடு முழுவதும் 13 மாநகராட்சிகளில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர், இவற்றில்தான் உள்ளனர். இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர். மும்பை, டெல்லி, உள்ளிட்ட 13 நகராட்சிகளின் ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன், மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா நேற்று ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் இது நடந்தது. இதில், இந்த மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டது.


Tags : Corona , People, corona, curfew
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...