தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா? நெய்யாற்றின்கரை பஸ் நிலையம் மூடல்

திருவனந்தபுரம்: நெய்யாற்றின்கரை  பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.கேரள   மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட நெய்யாற்றின்கரை பஸ்  நிலையத்தில் நேற்று  முன்தினம் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணும், 25 வயது வாலிபரும்  அமர்ந்து இருந்தனர்.  அவர்கள் நீண்ட நேரமாக அங்கேயே இருந்தனர். கையில் ஒரு  பையும்  வைத்திருந்தனர். இருவரும் மிகவும் சோர்வாக இருந்ததை  அங்கிருந்தவர்கள்  கவனித்தனர். எனவே அவர்களிடம் எங்கிருந்து  வருகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது  சேலத்தில் இருந்து வந்ததாக   கூறினர். அவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரித்தபோது, அவர்கள் சேலத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக களியக்காவிளை வந்து  குறுக்கு சாலை வழியாக எல்லையை கடந்து பஸ்சில்   நெய்யாற்றின்கரை வந்ததாகவும் கூறினர்.

பின்னர் போலீசார் அவர்களை   ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கொரோனா  தொற்று  இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எனவே உடனடியாக நெய்யாற்றின்கரை  பஸ்  நிலையம் மூடப்பட்டது. அவர்கள் சென்ற கழிப்பறையும் சீல் வைக்கப்பட்டது.   அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.பரிசோதனை அறிக்கை வந்த பிறகே  அடுத்தக்கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இந்த  நிலையில் அவர்கள் பயணம் செய்த  பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் பயணம்  செய்த அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: