×

ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழப்பு: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே போவார்கள்

* கொரோனாவில் தப்பினாலும் பட்டினிச்சாவு நிச்சயம்
* ஆய்வில் தகவல்

புதுடெல்லி: ஊரடங்கால் 1.2 கோடி இந்தியர்கள் வறுமையின் உச்சத்துக்கே சென்று விடுவார்கள் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. அதோடு, கடந்த ஏப்ரலில் மட்டும் 12.2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கில் முடங்கிக் கிடந்து வேலையையும் வாழ்தாவாரத்தையும் பறி கொடுத்த பலருக்கு, கொரோனாவால் உயிர் போகும் என்பதை விட, பட்டினியால் செத்துவிடுவோமோ என்ற பயம்தான் வாட்டி எடுக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் ஆய்வில் அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. கொேரானா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, 4வது முறையாக நீட்டிக்கப்பட்டு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. தொழில்துறைகள், நிறுவனங்கள் இயங்காததால், ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டன.

சிஎம்ஐஇ புள்ளி விவரப்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12.2 கோடி இந்தியர்களின் வேலை பறிபோய் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இதற்கிடையில், ஊரடங்கு, வறுமையின் கோரப்பிடியில் மக்களை தள்ளிவிடும் என புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வில், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவில் சிக்கி, உலக அளவில் 4.9 கோடி பேர் வறுமையின் உச்சத்துக்கே தள்ளப்படுவார்கள் எனவும்,  இதில் 1.2 கோடி பேர் இந்தியர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 140க்கும் கீழ் வருவாய் ஈட்டுபவர்கள். கால் வயிற்று கஞ்சிக்கே வழியில்லாமல் மக்கள் அல்லாடும் நிலையை இந்த ஊரடங்கு ஏற்படுத்தி விட்டது.

 இந்தியாவில் 27 மாநிலங்களில் 5,800 வீடுகளில் ஆய்வு செய்து சேகரித்த வேலையின்மை புள்ளி விவரங்களை ஆய்வு செய்த சிகாகோ பல்கலையின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ், கிராமங்களில் வருவாய் வீழ்ச்சி அதிகமாக இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.  பொருளாதாரம் மீள்வதற்கான வழிகளோ, இந்த ஆண்டு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் அடையும் என்றோ எதிர்பார்க்கவே முடியாது எனவும், நடுத்தர வர்க்கத்துக்கும் கீழ் உள்ள 10.4 கோடி இந்தியர்கள், உலக வங்கி நிர்ணயித்த அளவான நாள் ஒன்றுக்கு ₹240க்கும் கீழ் வருவாய் ஈட்டுவோருக்கும் கீழ் தள்ளப்படுவார்கள்.

இது வறுமை எண்ணிக்கையை 60 சதவீதத்தில் இருந்து 68 சதவீதமாக உயர்த்தும் என, பல்கலைக்கழக ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளது ஐபிஇ குளோபல் நிறுவனம். இந்தியாவில் வறுமையை ஒழித்து விடுவதாக, பிரதமர் நரேந்திர மோடி 2014ல் உறுதி அளித்தார். ஆனால், தற்போதைய ஊரடங்கு, மக்களின் வாழ்க்கையை சர்வநாசம் ஆக்கிவிட்டது, புள்ளி விவரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



Tags : Indians , 12.2 crore people lost jobs, curfew, 1.2 crore Indians, corona
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...