35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த பார்முலா 1 கார் பந்தயம் தள்ளிவைப்பு

ஜான்ட்வோர்ட்: நெதர்லாந்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருந்த டச்சு பார்முலா1 கிராண்ட் பிரீ கார் பந்தய போட்டி கொரோனா தொற்று பீதி காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.     நெதர்லாந்தில் உள்ள ஜான்ட்வொர்ட் நகரில் புகழ்பெற்ற டச்சு பார்முலா 1 கார் பந்தய போட்டி 1948 ஆம் ஆண்டு தொடங்கியது. ஐரோப்பிய பார்முலா 1 என இடையிடையே பெயர் மாற்றம் செய்யப்பட்ட இந்த பந்தயம், 1985 ஆம் ஆண்டு வரை 34 முறை நடைபெற்றது. அதன் பிறகு பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த டச்சு பார்முலா 1 கார் பந்தயம் நிறுத்தப்பட்டது.  நெதர்லாந்து மோட்டார் ரேசிங் கிளப் உட்பட பல்வேறு தரப்பினரின் முயற்சியின் காரணமாக இந்த ஆண்டு முதல் மீண்டும் பந்தயத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பீதி காரணமாக விளையாட்டுப் போட்டிகள் முடங்கின.

நெதர்லாந்திலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அதனால் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. ரசிகர்கள் இல்லாமல் போட்டியை விரும்பாத நிர்வாகம், போட்டியை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளது.  இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்ட டச்சு பார்முலா 1 கார் பந்தய விளையாட்டு பிரிவு இயக்குனர் ஜான்ஸ் லாமர்ஸ் கூறியதாவது: சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  தடம் காண இருந்த டச்சு கார் பந்தயத்தை நடத்த எல்லாவிதத்திலும் நாங்கள் தயாராக இருந்தோம். இன்னும் சொல்லப்போனால் இபோதும் தயாராக இருக்கிறோம். பந்தயத்தை காண்பதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொரோனா தொற்று பீதி காரணமாகவும், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த விருப்பம் இல்லாததாலும் பந்தயத்தை தள்ளி வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட போட்டிக்கான அட்டவணையை எப்ஐஏவுடன் சேர்ந்து பார்முலா1 நிர்வாகம் தீர்மானிக்கும். இத்தனை ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். கூடுதலாக ஓராண்டு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெறும் பந்தயம் என்பதால் ரசிகர்கள் இல்லாமல் நடத்த நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. எனவேதான் போட்டியை தள்ளி வைக்கும் சூழல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு செல்லுபடியாகும். இவ்வாறு லாமர்ஸ் கூறியுள்ளார்.

புதிய விதிகள் அறிமுகம்

பார்முலா 1 கார் பந்தயத்தின் அடுத்த 3 சீசன்களுக்கு பல்வேறு புதிய விதிகள் அறிமுகமாகி உள்ளன. அணிகள் தங்கள் கார்களை ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க, மேம்படுத்த, பராமரிக்க மற்றும் நிர்வாக ரீதியாக செலவிடும் தொகைக்கும் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அனைத்து அணிகளும் சமநிலையில் போட்டியிடும் வாய்ப்பு உருவாகும் என்பதுடன், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பிந்தைய பொருளாதார சூழலை எதிர்கொள்ளவும் உதவும் என்று பார்முலா 1 நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சீசனின் முடிவிலும் அணிகளின் செயல்பாட்டை பொறுத்து ஏரோடைனமிக் சோதனைக்காக செலவிடும் தொகையின் சதவீதம் நிர்ணயிக்கப்படும்.

Related Stories: