கட்டுக்குள் இல்லை, கட்டுக்கு அடங்காமல் இருக்கிறது கொரோனா பரவுவதை மறைக்க நினைப்பது மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்

* தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

* இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை.

சென்னை: கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது. எதையும் மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று திமுக தலைவர் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:   தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய்த் தொற்று பரவிய காலம் முதல் இதுவரை இவ்வளவு எண்ணிக்கையில் ஒரே நாளில் தொற்று ஏற்பட்டது இல்லை. மிக மிக அதிகமான எண்ணிக்கை இது.

சென்னையின் நிலைமை, மிகவும் அச்சம் தருவதாக உள்ளது.   ‘பாசிட்டிவ்’ என்று உறுதி செய்யப்பட்டவர்களையும், உங்களுக்கு அறிகுறி இல்லை என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைப்பதால்தானே இந்தப் பரவல் அதிகம் ஆகிறது என்பதை அரசு உணர்ந்ததா? சென்னையில் மட்டும் முன்னெச்சரிக்கை என்ற பெயரால், அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து, எத்தனை நாள் ஆகிவிட்டது? அதன்பிறகும் தொற்று குறைந்தபாடு இல்லை என்றால், இந்த அரசாங்கத்துக்குப் பேரிடர் காலத்தில் எப்படிச் செயல்படுவது என்பதே முழுமையாகத் தெரியவில்லை என்று அர்த்தம்.

ராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பரிசோதனைகள் செய்தால் எண்ணிக்கை கூடும் என்பதற்காகப் பரிசோதனை செய்யாமல் தவிர்க்கிறது தமிழக அரசு. சென்னைக்குச் சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். வீடுவீடாக பரிசோதனைகள் செய்ய வேண்டும். நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும். எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என எச்சரிக்க விரும்புகிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: