வாழ்வாதாரம் பாதித்து அவதிப்படும் மக்களுக்கு உதவ 6 மாதங்களுக்கு தலா 7,500: மத்திய அரசுக்கு சோனியா வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘மத்திய அரசு தனது கஜானாவை திறந்து. வாழ்வாதாரம் பாதித்து அவதிப்படும் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.7,500ஐ நேரடியாக வழங்க வேண்டும்,’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். காங்கிரஸ் சார்பில் ‘இந்தியர்களின் குரல்’ என்ற விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், அவர் பேசியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக இதுபோன்ற மோசமான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். கோடிக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கான வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.   மத்திய அரசானது தனது கஜானாவை திறக்க வேண்டும். தேவைப்படும் ஒவ்வொரு மக்களுக்கும் உதவிகள் செய்ய வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக ரூ.7,500ஐ மத்திய அரசு வழங்க வேண்டும். மேலும், உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும், இலவசமாகவும் சொந்த மாநிலங்களில் உள்ள தங்களின் வீடுகளுக்கு திரும்புவதையும், வேலை வாய்ப்பு மற்றும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும்.  

வங்கி கடன்களுக்கு பதிலாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் வழங்க வேண்டும். இதன் மூலமாக, கோடிக்கணக்கான வேலைவாய்ப்பு பாதுகாக்கப்படும். மக்களின் இந்த சிக்கலான நிலையை புரிந்து கொள்வதற்கும், அதனை தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்திய அரசு ஏன் மறுக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. எனவேதான், இந்தியாவின் குரலை ஒருங்கிணைப்பதற்காக சமூக பிரசாரத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த பிரச்சாரத்தில் இணைந்து மக்கள் தங்கள் குறைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மக்களின் குரலை வலிமைப்படுத்த முடியும். இந்த நெருக்கடியான தருணத்தில் ஒவ்வொரு மக்களுடனும் காங்கிரஸ் துணை நிற்கும். ஒன்றாக இணைந்த இந்த கடினமான காலத்தை வெல்வோம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

அரசின் காதில் விழவில்லையா?

தனது வீடியோ பதிவில் சோனியா மேலும் பேசுகையில், ‘‘லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதியின்றி நூறு மற்றும் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வலி, வேதனையின் குரலை ஒட்டுமொத்த நாடே கேட்கிறது. ஆனால், அவர்களின் அவலக்குரல் மத்திய அரசின் காதில் மட்டும் விழவில்லையா?,’’ என்றார்.

மன் கி பாத்துக்கு போட்டியா?

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இதை அவர் கடந்த 6 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். இதற்கு போட்டியாகவே  ‘இந்தியர்களின் குரல்’ என்ற மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

Related Stories: