×

பஸ், ரயில்களில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க தடை: உணவு, குடிநீரையும் இலவசமாக வழங்க வேண்டும்

˜ மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘பல்வேறு மாநிலங்களில் இருந்து ரயில், பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. அவர்கள் சொந்த ஊர் சென்றடையும் வரை உணவு, குடிநீரை இலவசமாக வழங்க வேண்டும்,’ என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை இது 4 முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. 4வது ஊரடங்கு நீட்டிப்பு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதால், மே 31க்குப் பிறகும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களுக்கு வேலை வாய்ப்புகளை தேடிச் சென்ற லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ரயில்கள், பஸ்களில் கூட்டம் கூட்டமாக பயணித்து வருகின்றனர். கையில் பணம் இல்லாதவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயிரக்கணக்கில் பல நூறு கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். இந்த தொழிலாளர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சிறப்பு ரயில்கள், பஸ்களை இயக்கி வருகின்றன. ஆனால், இவற்றில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஒரு சில மாநிலங்களில் மட்டும், டிக்கெட் கட்டணத்தை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பகிர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு நேற்று இந்த வழக்கை விசாரித்தது.  அப்போது, ‘புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரம்,  புலம்பெயர்ந்தோரை பதிவு செய்தல், போக்குவரத்து வசதி மற்றும் உணவு, குடிநீர் வழங்குவதில் பல குறைபாடுகள் இருக்கின்றன,’ என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சம்மந்தப்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இலவசமாக உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.

அவர்களுக்கான பஸ், ரயில் வசதி எப்போது செய்து தரப்படும் என்பதை தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மாநில அரசுகளும், ரயிலில் ரயில்வே நிர்வாகமும் உணவு, குடிநீரை வழங்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்களிடம் இருந்து பஸ், ரயில் போக்குவரத்திற்கான டிக்கெட் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் என எதுவாக இருந்தாலும் வசூலிக்கக் கூடாது. புலம்பெயர் தொழிலாளர்கள் பதிவை கண்காணித்து, அவர்களுக்கு விரைவில் பஸ், ரயில் வசதியை செய்து தருவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்,’’ என தெரிவித்தனர்.

தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
உணவு, குடிநீர் கிடைக்காமல் வெளிமாநில தொழிலாளர்கள் நோய் வாய்ப்பட்டு இறத்தல், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் ரயில்களை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுதல் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியதற்காக மத்திய சுகாதார செயலாளர், ரயில்வே, குஜராத், பீகார் மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ரயிலில் செல்லும் ஏழை தொழிலாளிகளின் உயிரை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டதாகவும் அதன் அறிக்கையில் குற்றம்சாட்டி உள்ளது. மீடியாவில் வந்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.

*  வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக கடந்த 1ம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
*  கடந்த 28 நாட்களில் நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து 3,736 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
* இந்த ரயில்களில் 50 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர்.
* இவர்களுக்கு ரயில்வே சார்பில் 85 லட்சம் உணவு பொட்டலங்கள், 1.25 கோடி குடிநீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
* மாநில அரசுகள் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பஸ்கள் மூலமும், பல லட்சம்
தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்று சேர்ந்துள்ளனர்.
* சாலை மார்க்கமாக நடந்து சென்றவர்கள், லாரி, வேன்களில் பயணித்தவர்கள், ரயில் தண்டவாளங்களில் நடந்து சென்றவர்கள் என, 100க்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள் பல்வேறு விபத்துகளில் இறந்துள்ளனர்.

Tags : migrant workers ,Migration workers , Supreme Court, Central and State Governments, Bus, Trains, Migrant Workers, Travel Charges
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்